பீஷானிலும் உபியிலும் ஒரு நாளில் மொத்தமாக கிட்டத்தட்ட மூன்று டன் எடைகொண்ட மின்சிகரெட்டுகளை விநியோகித்ததாக நம்பப்படும் ஆடவர்மீது புகையிலை (விளம்பர, விற்பனைக் கட்டுப்பாடு) சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றப் பத்திரிகைகளின்படி மலேசியாவைச் சேர்ந்த 21 வயது சோங் ஜுன் கியோங், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மின்சிகரெட்டுகளை விநியோகித்ததாக நம்பப்படுகிறது. அன்றைய தினம் பிற்பகல் 1.40 மணியளவில் பீஷானில் ஜாலான் பெமிம்பின்னில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் அவர் 103 பைகளில் மொத்தம் 1,966 கிலோகிராம் எடைகொண்ட மின்சிகரெட்டுகளை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் மூன்று மணிநேரத்துக்குப் பிறகு 4.20 மணிக்கு அவர் உபி அவென்யூ மூன்றில் உள்ள மற்றொரு தொழில்துறைக் கட்டடத்தில் மேலும் 51 பைகளில் மின்சிகரெட்டுகளை விநியோகித்ததாக நம்பப்படுகிறது. அவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 948 கிலோகிராம்.
ஒட்டுமொத்தமாக சோங் ஒருநாளில் 2,915 கிலோகிராம் எடைகொண்ட மின்சிகரெட்டுகளை விநியோகித்ததாகக் சந்தேகிக்கப்படுகிறது. மின்சிகரெட்டுகளில் உள்ள ரசாயனக் கலவை, சோங் எப்படிக் கைது செய்யப்பட்டார் போன்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
சோங்மீது சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.