உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் சிறுவனை அறைந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் சிறுவனை அறைந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது

1 mins read
df7c1a06-75b1-4175-b224-851a0e59b200
நான்கு வயது சிறுவனை அறைந்ததாகக் கூறப்படும் 36 வயது முகமது ஃபிர்டாவுஸ் முக்தார்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் நான்கு வயதுச் சிறுவனை அறைந்ததாகக் கூறப்படும் ஆடவர்மீது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்தச் சிறுவனின் விரலை உடைக்கப்போவதாகவும் 36 வயது முகமது ஃபிர்தௌஸ் முக்தார் கூறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஃபிர்தௌஸ்மீது துன்புறுத்தல், அடுத்தவருக்குக் காயம் விளைவித்தல், தாக்குதல் ஆகிய பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 82ல் உள்ள புளோக் 875க்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி, ஃபிர்தௌஸ் சிறுவனை அறைந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்க அவனது விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

ஃபிர்தௌஸ் சிறுவனின் வலது கையைப் பற்றி உலுக்கியதாகவும் கூறப்படுகிறது.

கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனைக்குப் பின்னர் கொண்டுசெல்லப்பட்ட சிறுவனின் கன்னத்தில் காயங்களைக் கண்ட ஊழியர்கள், காவல்துறைக்கு மார்ச் 6ஆம் தேதி மாலை 5 மணியளவில் புகார் அளித்தனர்.

அதே நாளில், பின்னேரத்தில் காவல்துறை அதிகாரிகள் ஃபிர்தௌசைக் கைதுசெய்தனர்.

ஃபிர்தௌசின் வழக்கு இம்மாதம் 28ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

14 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளைத் தாக்குவோருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டு சிறைதண்டனை, $10,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்