சைக்கிளோட்டி உயிரிழப்பு: ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
f7b70616-8c2e-4638-b084-04d749d61d80
மாதிரிப்படம்: - பிக்சாபே

கடந்த 2023ஆம் ஆண்டு நிக்கல் ஹைவேயில் போக்குவரத்திற்கு எதிர்த்திசையில் சென்று விபத்தை ஏற்படுத்தி, சைக்கிளோட்டி ஒருவர் இறக்கக் காரணமாக அமைந்ததாகக் கூறி, ஆடவர் ஒருவர்மீது புதன்கிழமையன்று (நவம்பர் 6) குற்றம் சுமத்தப்பட்டது.

டான் யோங் ரென், 34, என்ற அந்த ஆடவர்மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றுள் ஆறு போக்குவரத்து சார்ந்த குற்றச்சாட்டுகள்.

விபத்திற்குப் பிறகு காவல்துறையைத் தவிர்க்கும் நோக்கில், நீதித்துறைச் செயல்பாடுகளைத் தடுக்க முயன்றார் என்பது அவர்மீதான ஏழாவது குற்றச்சாட்டு.

கடந்த 2023 டிசம்பர் 19ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், கிலிமார்ட் சாலையை நோக்கிச் செல்லும் நிக்கல் ஹைவேயில், போக்குவரத்திற்கு எதிர்த்திசையில் டான் தமது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரது காரை அவ்வழியே சென்ற 45 வயது சைக்கிளோட்டிமீது மோதியதாகச் சொல்லப்படுகிறது.

ஆயினும், டான் தமது காரை நிறுத்தாமல், விபத்தில் சிக்கியவருக்கு உதவாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், விபத்து நேர்ந்த 24 மணி நேரத்திற்குள் அதுபற்றி அவர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

விபத்தில் காயமுற்ற அந்த சைக்கிளோட்டி பிரிட்டனைச் சேர்ந்தவர் என்றும் சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் பின்னர் இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே ஒரு குற்றச் செயலுக்காக, கடந்த 2012ஆம் ஆண்டில் டான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி, உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு நான்கு முதல் 15 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வாகனமோட்டும் தகுதியையும் அவர் இழக்கக்கூடும்.

டான்மீதான வழக்கு டிசம்பர் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்