சாங்கி கட்டடக் கழிவறையில் பெண்களைப் படமெடுத்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
82db22ee-b5f9-421a-b992-b6c6b472278a
மாதிரிப்படம்: - பிக்சபே

சாங்கியில் உள்ள ஒரு தொழில்துறைக் கட்டடத்தின் கழிவறையில் புகைப்படக் கருவிகளைப் பொருத்தி பெண்களைக் காணொளி எடுத்ததாக 28 வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டியூ மிங் கியாட் என்ற அந்த ஆடவர், 2022 ஜூலை மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் ஒரே கழிவறைக்குள் இரண்டு புகைப்படக் கருவிகளைப் பொருத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.

கழிவறையின் உட்கூரையிலும் நீர்த்தொட்டிக்கு அடியிலிருந்த தண்ணீர் வாளியிலும் புகைப்படக் கருவிகளை டியூ மறைத்து வைத்திருந்ததாகக் குற்றப்பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அவர் குறைந்தது ஆறு பெண்களின் தனிப்பட்ட செயல்பாடுகளைக் காணொளி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி டிசம்பர் 2ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் கிடைத்தது. மூன்று நாள்களுக்குப் பிறகு டியூ கைதானார். மலேசியரான அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள நினைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதன்கிழமையன்று மேலும் நான்கு ஆடவர்கள்மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகக் காவல்துறையின் அறிக்கை தெரிவித்தது.

சின் யான் செர்ங் என்ற 39 வயது ஆடவர், தனது கைப்பேசியைப் பயன்படுத்தி அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள ஒரு வீட்டின் உள்ளே பார்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஐம்பத்துமூன்று வயது கோ தியாம் சாய், சென்ற நவம்பர் மாதம் பெருவிரைவு ரயிலில் இரு பெண்களின் ஆடைக்கு அடியில் காணொளி எடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. .

நாற்பது வயது டேரியஸ் சியா ஜீலொங் 2021 ஜூலை மாதம் அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் 27 வயது பெண்ணின் ஆடைக்கு அடியில் காணொளி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. நான்காமவரான 37 வயது சென் வெய், பிப்ரவரி மாதம் தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியில் இதே செயலைச் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்