மோசடிகளில் ஈடுபடுவதற்காக சிங்கப்பூருக்கு வந்த சீனாவைச் சேர்ந்த நான்கு பேர் 60 வயது பெண்ணை ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
சமய ரீதியான சடங்கைக் காரணங்காட்டி பெண்ணிடமிருந்து $700 ரொக்கத்தையும் ஒரு தங்கச் சங்கிலியையும் அவர்கள் பெற்றனர்.
சடங்கு முடிந்ததும் மோசடிக்காரர்கள் பெண்ணின் உடைமைகள் இருப்பதாகக் கூறி பை ஒன்றை அவரிடம் கொடுத்தனர். ஆனால் அதில் இலைகள் மட்டும் இருந்தது பிறகு தெரியவந்தது.
அந்த நான்கு மோசடிக்காரர்களும் 75 வயதில் உள்ள மற்றொரு பெண்ணையும் ஏமாற்றினர். பெண் அவர்களை நம்பி $200 ரொக்கம் இருந்த சிவப்பு உறையைக் கொடுத்தார். பெண்ணிடமிருந்து நால்வரும் $500 மதிப்புள்ள ரொக்கத்தையும் திருடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவப்பு உறை இருப்பதாகக் கூறி பிளாஸ்டிக் பையை மோசடிக்காரர்கள் பெண்ணிடம் கொடுத்தனர். ஆனால் அதில் காய்கறிகள்தான் இருந்தது என்பதைப் பெண் பின்னர் அறிந்துகொண்டார்.
செப்டம்பர் 11ஆம் தேதி, 48 வயது ஹுவாங் சின்யன், 57 வயது ஹுவாங் மெய்லிங், 58 வயது சோங் ஃபெய்ஃபெங், 61 வயது ஹுவாங் சிமிங் ஆகியோர் மோசடியில் ஈடுபட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
ஆடவர் நால்வரும் கைதுசெய்யப்பட்டபோது அவர்கள் ஏமாற்றி ஈட்டிய வெகுமதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நால்வருக்கும் இம்மாதம் 17ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

