சிங்கப்பூர் கடற்பகுதியில் இழுவைப் படகு ஒன்று புதன்கிழமை (செப்டம்பர் 4) மூழ்கியதில் ஒருவர் மரணமடைந்தார்; மற்றொருவரைத் தேடும் பணி தொடர்கிறது.
மாண்டவர் 39 வயது ஆடவர் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், மாண்டவர் ‘ஒஷியோ’ என்ற அந்த இழுவைப் படகில் இருந்த இரண்டு சிப்பந்திகளில் ஒருவர் என்று சொன்னது.
அந்த இழுவைப் படகு பிற்பகல் 2.15 மணியளவில் கிழக்கு நங்கூர முனையத்தில் மூழ்கியது.
சிப்பந்தியைக் கடலோரக் காவல்படையினர் மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசென்றது. ஆயினும், அந்த ஆடவர் மருத்துவமனையில் மரணமடைந்துவிட்டார்.
இழுவைப் படகில் இருந்த மற்றொரு சிப்பந்தியைத் தேடி மீட்கும் பணிகளை கடலோரக் காவல்படையுடனும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடனும் தான் ஒருங்கிணைந்து மேற்கொண்டுவருவதாக ஆணையம் விளக்கியது. அந்த மற்றொரு சிப்பந்தியின் பாலினம், வயது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மூழ்கிய இழுவைப் படகை மீட்க ஏதுவாக, அது மூழ்கிய இடத்தை உறுதிசெய்யும் பணியில் முக்குளிப்பாளர்களை ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. அத்துடன், மற்ற கப்பல்கள் அந்த வழித்தடத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.
இழுவைப் படகு மூழ்கிய இடத்தில் எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் இணையத்தள தகவலின்படி, மரினா அணைக்கட்டுப் பகுதியில் கிழக்கு நங்கூர முனையம் அமைந்துள்ளது.


