நிறுவனம் ஒன்று நடத்திய இரவு விருந்து நிகழ்ச்சியில் மது அருந்திய பிறகு ஆடவர் ஒருவர் வீட்டுக்கு காரை ஓட்டிச் செல்ல முடிவெடுத்தார்.
ஆனால், விருந்து நிகழ்ச்சி நடந்த பொழுதுபோக்கு நிலையத்தின் (country club) வளாகத்தில் ஆடவர் வழி தெரியாமல் தொலைந்துபோனார். பிறகு அவர் அங்கு நீச்சல் குளத்துக்குள் காரைச் செலுத்தியிருக்கிறார்.
சிலேத்தார் பொழுதுபோக்கு நிலையத்தின் வளாகத்தில் அவர் காரை எட்டு நிமிடங்களுக்கு ஓட்டி அதிக சேதத்தை ஏற்படுத்தியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. வில்லியம் தெங் குவான் ஹாவ் எனும் அந்த 63 வயது ஆடவர், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கவனமின்றி ஒரு செயலில் ஈடுபட்டதாகவும் மொத்தம் இரண்டு குற்றச்சாட்டுகளைத் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) ஒப்புக்கொண்டார்.
வரும் புதன்கிழமை (ஊப்ரல் 9) அவருக்குத் தீர்ப்பளிக்கப்படும்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இச்சம்பவம் நேர்ந்தது. தெங், அன்றிரவு சிலேத்தார் பொழுதுபோக்கு நிலையத்தில் மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர், சிறார் விளையாட்டு மைதானத்துக்கு (playground) நடுவே காரை ஓட்டிச் சென்ற பிறகு நீச்சல் குளத்துக்குள் காரைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

