ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகிலுள்ள கடலில் இருந்து 28 வயதுடைய ஒருவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) அன்று மீட்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவ அதிகாரி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11.55 மணியளவில், நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை, மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நண்பகல் 12 மணியளவில் நீர் மீட்பு உதவிக்கான அழைப்பு வந்ததை உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கரையிலிருந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள தீயணைப்பு வீரர்களை அனுப்பினர்.
பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் (டார்ட்) முக்குளிப்பாளர்களும் அந்த நபர் கடைசியாகக் காணப்பட்ட பகுதியில் நீருக்கடியில் தேடுதலை மேற்கொண்டனர்.
அதே நேரத்தில், குடிமைத் தற்காப்புப் படையின் கடல்சார் தீயணைப்பு வீரர்கள் ஒரு கடல்சார் மீட்புப் படகில் அருகில் உள்ள கடற்பகுதியில் பயணம் செய்து ஆடவரைத் தேடினர்.
மாலை 6.40 மணியளவில், குடிமைத் தற்காப்புப் படையின் மீட்புக் குழுவினர் அந்த நபரின் உடலைக் கரையோரத்திலிருந்து மீட்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இச்சம்பவத்தில் எந்த சூதும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
மீட்பு நடவடிக்கையை பார்வையாளர் ஒருவர் கேமராவில் படம்பிடித்தார். மேலும் அந்தக் காட்சிகள் சீன சமூக ஊடகமான சியாவ்ஹோங்ஷுவில் பதிவேற்றப்பட்டன.

