மின்னிலக்க நாணய ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்டவருக்குச் சிறை

1 mins read
5b611ce9-ca14-45f8-b674-5078b540a49c
சீனாவைச் சேர்ந்த 43 வயது சென் வெய்க்கு நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்னிலக்க நாணய முதலீட்டு மோசடித் திட்டத்தில் ஈடுபட்ட சென் வெய் எனும் 43 வயது ஆடவருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஈடுபட்ட மோசடியில் சிக்கியவர்கள் மொத்தம் 1.1 மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்தனர்.

சீனாவைச் சேர்ந்த சென், ஏமாற்றியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் தகுந்த வேலை அனுமதி இல்லாததன் தொடர்பில் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் புதன்கிழமையன்று (செப்டம்பர் 11) ஒப்புக்கொண்டார். தீர்ப்பளிக்கும்போது மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.

சென், ‘ஏ&ஏ புளோக்செயின் டெக்னாலஜி இனோவே‌ஷன்’ நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். அந்நிறுவனத்தின் தலைவரும் சம்பந்தப்பட்ட ‘பொன்ஸி’ மோசடித் திட்டத்தை வரைந்தவருமான நெதர்லாந்தைச் சேர்ந்த 61 வயது யாங் பின் என்பவருக்குக்கீழ் சென் வேலை செய்தார்.

லாபம் ஈட்ட வகைசெய்யும் 300,000 மின்னிலக்க நாணய இயந்திரங்கள் இருப்பதாகக் கூறி ‘ஏ&ஏ புளோக்செயின் டெக்னாலஜி இனோவே‌ஷன்’ சில்லறை வர்த்தக முதலீட்டாளர்களை ஈர்த்தது. ஆனால், அந்நிறுவனத்திடம் அத்தகைய இயந்திரங்கள் ஏதும் இல்லை என்றும் அது ஒரு ‘பொன்ஸி’ மோசடித் திட்டம் என்றும் தெரிய வந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று யாங்குக்கு ஆறு ஆண்டுச் சிறைத் தண்டனையும் 16,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. ஏமாற்றியதாக சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் வெளிநாட்டவரை வேலைக்கு எடுப்பதன் தொடர்பிலான இரு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்