சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஏறிய பிறகு, ஆடவர் ஒருவர் தனது கைப்பேசியைத் தொலைத்ததை உணர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் ரிச்சர்ட் மைக்கல் ரோல் பரிட்ஜ் எனும் அந்த 57 வயது ஆடவர் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதன் பிறகு கைப்பேசி, விமானத்தில் தனது இருக்கைக்குக் கீழ் இருந்ததை அறிந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த பரிட்ஜ், லண்டனுக்குப் புறப்படவிருந்த அவ்விமானத்திலிருந்து இறக்கப்பட்டார். தொந்தரவு இழைத்ததாகவும் பொல்லாங்கில் ஈடுபட்டதாகவும் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அதனையடுத்து வியாழக்கிழமை (மார்ச் 20) பரிட்ஜுக்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இம்மாதம் ஏழாம் தேதி இரவு 11.40 மணியளவில் பரிட்ஜ் விமானத்தில் இருந்தபோது தனது கைப்பேசியைக் காணவில்லை என்பதை உணர்ந்ததாக அரசாங்க வழக்கறிஞர் டான் ஜுன் யா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன் பின்னர் கைப்பேசியைத் தேடுவதற்காக அவர் பிறருக்குத் தொந்தரவு இழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் பணியில் இருந்த மாது ஒருவரைத் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தவும் செய்தார்.

