பாதுகாப்பு அதிகாரி ஒருவர், காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஆகியோரைத் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்திய ஆடவருக்கு புதன்கிழமையன்று (செப்டம்பர் 18) அபராதம் விதிக்கப்பட்டது.
தொந்தரவு தருவதிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (Protection from Harassment Act) தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை குற்றவாளியான 30 வயது மோகனராஜன் மோகன் ஒப்புக்கொண்டார். அவருக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
மோகனராஜன், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று நினைவிழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று அரசு வழக்கறிஞர் ஏ. மஜீத் யூசோஃப் தெரிவித்தார். அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது அவர் கண்விழித்திருக்கிறார்.
மதுபோதையில் இருந்த மோகனராஜன், தன்னை மருத்துவமனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், மருத்துவர், இதர மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரைத் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. தன்னை அமைதிப்படுத்த முயன்ற துணை காவல்துறை அதிகாரி (auxiliary police officer) ஒருவரையும் மோகனராஜன் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தியிருக்கிறார்.
டான் டோக் செங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பிறகும் மோகனராஜன் தொடர்ந்து துணை காவல்துறை அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இருவர் மோகனராஜனிடம் பேச அவரிடம் சென்றனர். அந்த அதிகாரிகளில் ஒருவரையும் மோகனராஜன் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தியிருக்கிறார்.
“சட்டப்படி நான் இப்போது மருத்துவமனைக்குள் இல்லை. சரிதானே? என்னை விட்டுவிடுங்கள்,” என்று மோகனராஜன் அலறியிருக்கிறார். மேலும் சில காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்த பிறகு அவர்களையும் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தினார். பின்னர் மோகனராஜன் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை காரில் இருந்தபோதும் அவர், அதிகாரிகளைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தினார். அதோடு, நிறுத்தச் சொன்ன பிறகும் மோகனராஜன் காரின் உட்றுபறத்தை உதைத்துக்கொண்டே இருந்ததாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.


