தோ பாயோ லோரோங் 1ன் ஓர் ஓரத்தில் சிங்கப்பூர் தேசியக் கொடிகளைக் கொண்டு 60 என்ற எண் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த காட்சிப்படுத்தல் இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளுக்கு இடையே இடம்பெற்றுள்ளது. 60 தேசியக் கொடிகளைக் கொண்டு 60 உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் படைப்பு இடம்பெறுகிறது.
ஆண்டுதோறும் இந்த எண் சிங்கப்பூரின் பிறந்தநாளுக்கு ஏற்றவாறு மாறும். 2015ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தப் படைப்பு இடம்பெற்று வருகிறது.
இவ்வட்டாரத்தில் தேசிய தின உணர்வைக் குறிக்கும் படைப்பாக விளங்கும் இதை உருவாக்கியவர் ஓய்வுபெற்ற மளிகைக் கடை உரிமையாளரான 63 வயது ஓங் கோக் சீ. 1973ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையின் மளிகைக் கடையை நடத்த உதவிய இவர், தோ பாயோ ஈஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக தனது தந்தை சமூகத்துக்கு உதவிக்கரம் நீட்டியதைப் பார்த்தவர்.
தோ பாயோ நார்த் புளோக் 206ல்தான் திரு ஓங், பல்வேறு வாழ்க்கைச் சூழல்களைச் சேர்ந்தோரைச் சந்தித்து அவர்களின் கவலைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார். மினதூக்கி பழுதாவது போன்ற சிறிய பிரச்சினைகள் முதல் ஒருவர் மோசமாக நோய்வாய்ப்படுவது போன்ற பெரும் பிரச்சினைகள் வரை எல்லாவற்றுக்கும் உதவி தேவைப்படுவோர் இவரை அழைத்திருக்கின்றனர்.
“குடியிருப்பாளர்களுக்கு சேவையாற்றுவதைத்தான் எனது தந்தை செய்தார். நான் அவரைப் போல் இருக்க விரும்பினேன்,” என்றார் அண்மையில் ஓய்வுபெற்று தனது கடை உள்ள பகுதியை வாடகைக்கு விட்டுள்ள திரு ஓங்.
தந்தையின் பாதையில் சென்ற இவர் 1998ல் தோ பாயோ நார்த் ஸோன் 2 குடியிருப்பாளர்க் குழுவில் அடித்தளத் தலைவராகச் சேர்ந்தார். ஒவ்வொரு தேசிய தினத்துக்கும் திரு ஓங்கும் அவரின் குழுவும் சேர்ந்து தங்கள் குடியிருப்பு வட்டாரத்தில் சிறிய தேசியக் கொடிகளை மாட்டி வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2015ல் சிங்கப்பூரின் 50வது தேசிய தினம் வந்தது. அதற்கு சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்ய விரும்பினார் திரு ஓங்.
முதலில் பெரிய தேசியக் கொடியைத் தொங்கவிட எண்ணிய இவர், பின்னர் சிறிய கொடிகளைக் கொண்டு தேசிய தினப் ‘படைப்பை’ வழங்க எண்ணினார்.
2015லிருந்து ஆண்டுதோறும் தோ பாயோ நார்த்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.
அப்போதிருந்து திரு ஓங்கும் தொண்டுழியர்களும் தேசிய தினக் கொடி வடிவமைப்பைப் படைத்து வருகின்றனர். எஸ்ஜி50ல் தொடங்கிய இந்த மாறுபட்ட தேசிய தினக் கொண்டாட்டம் எஸ்ஜி60 வரை தொடர்ந்துள்ளது.