அப்பர் பாய லேபார் ரோட்டில் வியாழக்கிழமை (ஏப்ரல் 3), 55 வயது ஆடவர் ஒரு காருக்குள் மாண்டு கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கார் இரண்டு நாள்களாகச் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை அருகிலுள்ள நிறுவனத்தின் ஊழியர் கவனித்துத் தகவல் அளித்ததாகக் காவல்துறை கூறியது. சீனமொழி நாளேடான சாவ் பாவ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 5ஆம் தேதி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் எண் 123 அப்பர் பாய லேபார் ரோட்டிலிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் கூறியது.
சம்பவ இடத்தில் காருக்குள் அந்த ஆடவர் அசைவின்றிக் காணப்படதாகவும் சம்பவ இடத்திலேயே அவர் மாண்டுவிட்டதாகக் கூறப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தவறு ஏதும் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

