மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஆடவருக்கு அபராதம், வாகனம் ஓட்டத் தடை

2 mins read
1e64513e-b4c4-450d-ae25-c2fdd84b9c57
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடவர் ஒருவர் பிடிபட்டதால், அவருக்கு $9,400 அபராதம் விதிக்கப்பட்டதுடன், 48 மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.

மதுபோதையில் வாகனம் ஓட்டியது, கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் 40 வயதான ஆறுமுகம் குமரகுருபரன், புதன்கிழமை (ஜனவரி 21) அன்று ஒப்புக்கொண்டார்.

ஏப்ரல் 11, 2025 அன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்தியாவைச் சேர்ந்த அந்த ஆடவர், ஆயர் ராஜா விரைவுச் சாலையில் மரினா கோஸ்டல் விரைவுச் சாலையை நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவர், ஆறுமுகம் சாலையின் நடுத்தடத்தில் வாகனம் ஓட்டுவதைக் கவனித்து ஆறுமுகத்தை நிறுத்த முயன்றார்.

அவரை நெருங்கிச் சென்றபோது, ​​அவர் வாகனம் ஓட்டும்போது இடது கையால் கைப்பேசியைப் பிடித்துக்கொண்டு வலது கையால் கைப்பேசி திரையைத் தட்டுவதை அதிகாரி கவனித்தார்.

சோதனைக்காக அவரை நிறுத்தியபோது, ​​ஆறுமுகம் மது அருந்தியிருப்பதைக் கவனித்த அதிகாரி, அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தார்.

அவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரது ரத்தம், மதுவின் பகுப்பாய்விற்காக எடுக்கப்பட்டது.

ஆறுமுகத்தின் 100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 288 மில்லிகிராமுக்கும் குறையாத மது இருப்பது சோதனைகளில் தெரியவந்தது.

இது 100 மில்லி ரத்தத்தில் 80 மி.கி. மது என்ற பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகும்.

2025 ஏப்ரல் 11 அன்று நள்ளிரவு வாக்கில் துவாசில் உள்ள தனது தங்குவிடுதியில் அவர் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அதிகாலை 3.30 மணியளவில் தூங்கச் சென்றதாகவும் காட்டுகின்றன.

அவர் மூன்று பாட்டில் பீரும் ஒரு பாட்டில் பிராந்தியும் குடித்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

ஆறுமுகம் தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபராகவும், இன்னும் பள்ளியில் படிக்கும் தனது மூன்று பிள்ளைகளையும் ஆதரிக்க வேண்டியிருப்பதாலும் தண்டனையைக் குறைக்கும்படி நீதிபதியிடம் கருணை கோரினார்.

கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டினால், குற்றவாளிக்கு $1,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்