ராணுவப் பயிற்சியின்போது ஆடவர் ஒருவரின் உடலுக்குள் தோட்டா பாய்ந்ததாகவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 16) தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை, மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதியில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியில் உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டது.
அந்தப் பகுதி ராணுவப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்று தற்காப்பு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
ராணுவப் பயிற்சி நடந்துகொண்டிருந்தபோது காலை 11.40 மணி அளவில் அந்த 42 வயது ஆடவர் தமது நண்பர்களுடன் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆடவரின் இடது பக்க கீழ் முதுகில் குண்டடி பட்டதாக காவல்துறை கூறியது.
அவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆடவரின் முதுகிலிருந்து அந்தத் தோட்டா அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்தி பயிற்சி செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி அப்பகுதிக்குள் செல்லக்கூடாது என்று பல எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் குறித்து காவல்துறையும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் விசாரணை நடத்துகின்றன.