தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைப்பேசி மோசடியில் ஈடுபட்ட ஆடவருக்கு ஈராண்டுகள் சிறை

3 mins read
fe9a1d8b-174c-4d1d-bcf3-620c77b2a27f
குற்றத்தை ஒப்புக்கொண்ட டிங் ஜியுன் ஹாவுக்குச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

களவாடிய கடன் பற்று அட்டை விவரங்களைக் கொண்டு கைப்பேசிகளை வாங்கிய மலேசிய ஓட்டுநர் டிங் ஜியுன் ஹாவுக்கு ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்த இருவருடன் சேர்ந்து அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. $45,000க்கும் மேல் பெறுமானமுள்ள கைப்பேசிகளை சிங்கப்பூரில் வாங்கிய மோசடிக் கும்பல், அவற்றைப் பின்னர் மலேசியாவில் விற்றது. 

26 வயது டிங்கிற்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) ஈராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரின் பால்ய நண்பரான டாங் சின் ஹுவாட்டுக்கு கடந்த ஜூன் மாதம் ஓராண்டு, பதினொரு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் மலேசியரே.

மூன்றாமவரான லியாவ் வென் செங் மலேசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவரைக் கண்டுபிடித்துக் கைதுசெய்யக் காவல்துறையினர் முயற்சி எடுப்பதாகத் துணை அரசாங்க வழக்கறிஞர் ரோனி ஆங் கூறினார்.

டாங்கும் டிங்கும் வாகன ஓட்டுநர்களாக இருந்தனர். மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் அவர்கள் பயணிகளை ஏற்றிச்சென்றதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கூடுதல் பணம் ஈட்ட விருப்பமுள்ளதா என்று டிங்கிடம் லியாவ் கேட்டுள்ளார்.

“பாஸ்” (Boss) என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத ஒருவர், தன்னிடம் சிங்கப்பூரில் கைப்பேசிகளை வாங்க மற்றவர்களின் கடன் பற்று அட்டைகளைக் கொடுத்ததாக லியாவ் கூறினார். பின்னர் அவற்றை மலேசியாவில் விற்பது திட்டம்.

கடன் பற்று அட்டைகளின் விவரங்களை மூன்றாம் தரப்பினர் களவாடியதாக நீதிமன்றத்திற்குத் தெரியவந்தது.

விற்கப்படும் ஒவ்வொரு கைப்பேசிக்கும் 500 ரிங்கிட் ($151) கொடுக்க லியாவிடம் உறுதிகூறியிருந்தார் ‘பாஸ்’. டிங்குடன் லாபத்தைப் பங்குபோட்டுக்கொள்ள முன்வந்தார் லியாவ்.

சிங்கப்பூருக்குள் பயணம் செய்ய ஒரு கார் தேவைப்பட்டதால் டாங்கையும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்படி லியாவைக் கேட்டுக்கொண்டார் டிங்.

லியாவ் தொடர்புகொண்டபோது அதற்கு இணங்கினார் டாங்.

சதித்திட்டத்தின்படி, லாபத்தில் லியாவுக்கு 50 விழுக்காடும் மற்ற இருவருக்கும் ஆளுக்கு 25 விழுக்காடும் கிடைக்கும்.

2024ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, மூவரும் டாங்கின் காரில் சிங்கப்பூருக்கு வந்தனர். ஆர்ச்சர்ட் ரோடு, கேலாங் முதலிய இடங்களில் உள்ள நான்கு கைப்பேசிக் கடைகளுக்கு அவர்கள் சென்றனர்.

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஒரு கடையில் 13 கைப்பேசிகளை அவர்கள் வாங்கினர்.

ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த கடையின் ஊழியர் ஒருவர், ஐந்து கைப்பேசிகளைக் கொடுக்காமல் வைத்துக்கொண்டார்.

அவற்றைக் கொடுக்கும் முன்பு கடப்பிதழ்களைச் சரிபார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார் ஊழியர்.

மூவரும் அந்த ஐந்து கைப்பேசிகளையும் பெறாமல் எஞ்சியிருந்த 18 கைப்பேசிகளுடன் மலேசியாவுக்குத் திரும்பினர்.

அவற்றின் மதிப்பு $39,700க்கும் அதிகம்.

கைப்பேசிகளைப் பின்னர் விற்ற லியாவ், டிங்கிற்கும் டாங்கிற்கும் ஆளுக்கு 2,250 மலேசிய ரிங்கிட் கொடுத்தார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூருக்குள் மீண்டும் வந்தபோது டிங் பிடிபட்டார்.

அதே மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூருக்குத் திரும்பிய டாங், அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

லியாவ் இன்னும் தேடப்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்