சைனாடவுனில் உள்ள சிகை அலங்காரக் கடை ஒன்றில் தம்பதியைத் தாக்கிய ஆடவருக்கு 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தம்பதியுடன் வாக்குவாதம் செய்த 78 வயது மன் இயூ வா, அதே நாளில் இரண்டு முறை தம்பதியைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள கடையில் வாங்கப்பட்ட சுத்தியலையும் கத்தியையும் கொண்டு மன் தம்பதியைத் தாக்கினார்.
54 வயது பெண்ணின் இடது தோளில் கத்தியால் குத்தியதையும் 66 வயது ஆடவரின் மார்பையும் காதையும் கத்தியால் தாக்கியதையும் மன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சிகை அலங்காரக் கடையில் தம்பதி அமர்ந்திருந்தபோது அங்கு வந்த மன் அவர்கள் இருவருக்கும் இடையில் உட்கார்ந்தார்.
அதையடுத்து மூவருக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், எப்படி அந்த வாக்குவாதம் தொடங்கியது, எதற்கு தொடங்கியது போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையே, சிலை அலங்காரக் கடையிலிருந்து வெளியேறிய தம்பதியர் அருகில் உள்ள காப்பிக் கடைக்குச் சென்றனர். அங்கு அவர்களைப் பார்த்த மன், சுத்தியலால் ஆடவரின் கையில் அடித்தார்.
அதை எதிர்த்து மன்னைப் பலமுறை தாக்கிய ஆடவர் அவரை அவ்விடத்திலிருந்து ஓடிவிடும்படி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், சுத்தியலை வாங்கிய அதே கடைக்குச் சென்ற மன், இந்த முறை கத்தி ஒன்றை வாங்கிக்கொண்டு தம்பதியைத் தேடிச் சென்றார்.
சைனாடவுன் கடைத்தொகுதியில் தம்பதியைப் பார்த்த மன், ஆடவரின் மார்பையும் காதையும் பெண்ணின் தோளையும் கத்தியைக் கொண்டு தாக்கினார்.
சம்பவ இடத்தைவிட்டு பின் தப்பியோடிய மன் அதே நாளில் கைதுசெய்யப்பட்டார்.
காயமடைந்த தம்பதிக்குச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. பெண்ணுக்கு 5 சென்டிமீட்டர் ஆழமான காயம் ஏற்பட்டது.
சம்பவத்தின்போது மன்னுக்கு மனநலம் சரியில்லை என்பதைத் தற்காப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.