எரிபொருள் திருட்டுக்கு உடந்தையாக இருந்த எரிபொருள் சேமிப்புக் கப்பல் முன்னாள் ஊழியர்க்கு புதன்கிழமை (அக்டோபர் 22) ஐந்தாண்டுகளும் பத்து மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆலன் டான் செங் சுவான், 53, என்ற அந்த ஆடவர் $17.5 மில்லியனுக்கும் மேல் மதிப்புடைய, 27,000 டன்னுக்கும் அதிகமான எரிபொருளைக் கைமாற்றிவிட உதவினார்.
தன்மீதான 12 குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார். அவர்மீதான மேலும் 18 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன.
சென்டெக் மரீன் அண்ட் டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த டான், 2014 செப்டம்பருக்கும் 2017 நவம்பருக்கும் இடையே 43 முறை அக்குற்றத்தைப் புரிந்தார். அதற்காக அவர் $274,000க்கும் அதிகமான தொகையைப் பெற்றார்.
எரிபொருளை வாங்கி விற்கும் தொழிலில் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்தது. ‘சென்டெக் 26’ எனும் எரிபொருள் சேமிப்புக் கப்பலின் பொறுப்பாளராக டான் செயல்பட்டார்.
புலாவ் புக்கோமில் உள்ள ஷெல் ஈஸ்டர்ன் பெட்ரோலியம் நிறுவனத்திலிருந்து, அதன் சில ஊழியர்கள் மூலமாக முறைகேடான வழியில் வந்த எரிபொருளைச் சேமிக்க அக்கப்பல் பயன்படுத்தப்பட்டது. அதற்குச் சந்தை மதிப்பில் 60 விழுக்காட்டுத் தொகையை வழங்க சென்டெக் ஒப்புக்கொண்டது. பின்னர் அது 62.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.
அவ்வகையில், 2014 முதல் 2018க்குள் 200,000 டன்னுக்கும் அதிகமான, $120 மில்லியனுக்கும் மேல் மதிப்புடைய எரிபொருளைத் திருடியதற்காக சம்பந்தப்பட்ட ஷெல் நிறுவன ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

