கேலாங்கில் உள்ள ஒரு வளாகத்தில் இருந்தபடி, ஒரு கும்பல் சட்டவிரோதமாக நாணய மாற்று வணிகத்திலும் மின்னிலக்க நாணய வணிகத்திலும் ஈடுபட்டது.
கடந்த 2023 பிப்ரவரி 1 முதல் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அக்கும்பல் குறைந்தது 430 முறை உள்நாட்டு, வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டது. அவற்றின் மொத்த மதிப்பு குறைந்தது $35 மில்லியன் எனத் தெரிவிக்கப்பட்டது.
2023 பிப்ரவரி 23ஆம் தேதி காவல்துறை அவ்வளாகத்தில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து, அக்கும்பலின் மூளையாகச் செயல்பட்ட லோ ஹான் சுவான் என்ற சிங்கப்பூரர் நாட்டைவிட்டுத் தப்பியோடினார்.
இந்நிலையில், அக்கும்பலில் லோவிற்கு அடுத்த நிலையில் செயல்பட்ட ஜேவியர் சியா கிட் ஹாவ், 34, என்ற ஆடவருக்கு வியாழக்கிழமை (ஜூன் 26) பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, உரிமம் பெறாமல் கட்டணச் சேவை வழங்கியதற்கு உடந்தையாக இருந்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2021 செப்டம்பர் முதல் 2023 பிப்ரவரிவரை லோ பலரை வேலைக்கு அமர்த்தி, சட்டவிரோத நாணய வணிகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
சியா அந்தக் குழுவை வழிநடத்தி, அவ்வணிகத்தின் அன்றாடச் செயல்பாடுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக அவருக்கு மாதம் $3,500 சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.