புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வட்டாரக் குடியிருப்புப் பகுதியில் மணிக்கு 82 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டிய ஆடவருக்கு 17 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட வேக வரம்பைவிட மணிக்கு 30 கிலோமீட்டருக்குமேல் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டிய அவர், சாலையைக் கடந்த இங் சியாவ் டீ எனும் 76 வயது மூதாட்டியைக் கவனிக்கத் தவறிவிட்டார்.
மூதாட்டியின்மேல் வாகனம் மோதுவதற்கு 0.2 வினாடிக்கு முன்னர் அவர் வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை. மோதிய வேகத்தில், அந்த மூதாட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர், பின்னர் உயிரிழந்தார்.
போதிய கவனமின்றி வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட 61 வயது ஆங் கிம் சுவானுக்கு பிப்ரவரி 13ஆம் தேதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் எட்டு ஆண்டுகளுக்கு எந்த வகை வாகனத்தையும் அவர் ஓட்ட இயலாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மாலை 5.22 மணியளவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள இரு தடங்களைக் கொண்ட சாலையில் ஆங் வாகனத்தை ஓட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6ஐ நோக்கி அவர் வாகனத்தைச் செலுத்திய வேளையில், திருவாட்டி இங் சாலையைக் கடக்கத் தொடங்கினார். அந்தச் சாலையில் வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வேக வரம்பு மணிக்கு 50 கிலோமீட்டர்.
அது பாதசாரிகள் கடப்பதற்கான பகுதி இல்லை என்றபோதும் ஓட்டுநர் என்ற முறையில் சரியாகக் கவனிக்கவேண்டிய பொறுப்பு ஆங்கிற்கு உண்டு என்பதை அரசாங்கத் தரப்பு சுட்டியது.
சாலை வளைவை நெருங்கிய நிலையிலும் ஆங் தொடர்ந்து வேகத்தை அதிகரித்தார். விசாரணையில் அவர் மணிக்கு 82 முதல் 86 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் சென்றது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராப் பதிவுகள், மோதுவதற்கு 2.8 வினாடிகள் முன்பே திருவாட்டி இங்கை அவர் காண முடிந்தும் 0.2 வினாடி முன்னதாகத்தான் ஆங் வாகனத்தை நிறுத்த முயன்றதைக் காட்டின.

