சோதனைச்சாவடி அதிகாரியைப் படமெடுத்த ஆடவருக்குச் சிறை

சோதனைச்சாவடி அதிகாரியைப் படமெடுத்த ஆடவருக்குச் சிறை

1 mins read
75ad3d21-5f4c-4667-8529-7d3e5885d608
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் குடிநுழைவு அதிகாரி ஒருவரைப் படமெடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய வோங் ஜியோ வா என்ற இந்த ஆடவருக்கு நான்கு வாரங்கள், மூன்று நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 2024ஆம் ஆண்டு குடிநுழைவு அதிகாரி ஒருவரைப் படமெடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய ஆடவருக்கு நான்கு வாரங்கள், மூன்று நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வோங் ஜியோ வா என்ற அந்த 38 வயது ஆடவர், மற்றோர் அதிகாரியை அவதூறாகப் பேசிய குற்றத்தையும் எதிர்கொண்டார்.

வோங்கிற்கு $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்த முடியாத நிலையில் அவர் கூடுதலாக ஐந்து நாள்களைச் சிறையில் கழிக்கவேண்டும்.

அரசாங்க அதிகாரிக்கு எதிராக அவதூறாகப் பேசியது, அரசாங்க அதிகாரியிடம் பொய்த் தகவல்கள் அளித்தது, பெண் ஒருவரை வேண்டுமென்றே காயப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை வோங் ஒப்புக்கொண்டார்.

பாதுகாக்கப்பட்ட வட்டாரத்தை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த குற்றமும் தீர்ப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

2024 ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியிலிருந்து மலேசியா நோக்கிச் சென்ற வோங்கிடம் அவரது காரின் பின்பகுதி சன்னலை இறக்கும்படி அதிகாரி கூறினார்.

வோங் அவ்வாறு செய்தபோதும் சன்னல் திரையை அவர் அகற்றவில்லை. திரையை அகற்றும்படி சொன்ன அதிகாரியைப் பார்த்து வோங் முணுமுணுத்தத்துடன் அதிகாரியின் அனுமதியின்றி அவரின் புகைப்படத்தையும் காணொளியையும் திறன்பேசியில் பதிவுசெய்தார்.

அதைக் கண்ட மற்றோர் அதிகாரி அவற்றை அழிக்கும்படி கூற, வோங் அவற்றை அழித்தார். அதன்பின்னரே அவர் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியிலிருந்து புறப்பட அனுமதிக்கப்பட்டார்.

மலேசியாவில் இருந்தபோது ‘ஸ்கை எஸ்ஜி’ பெயரில் ‘கம்ப்ளெயின்ட் சிங்கப்பூர்’ என்ற ஃபேஸ்புக் குழுவில் அதிகாரியின் புகைப்படத்தையும் காணொளியையும் வோங் பதிவேற்றினார். அதையடுத்து, அந்த அதிகாரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்