இங்கிலீஷ் பிரிமியர் லீக் போன்று ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் இடம்பெறும் காற்பந்து போட்டிகளை நேரலையில் காண சிங்கப்பூர் உள்பட ஆசியாவில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
அவரவர் நாடுகளில் உள்ள அதிகாரபூர்வ ஒளிபரப்பாளர்களிடம் சந்தா செலுத்தியே அவர்கள் அவ்வாறு ரசிக்கமுடியும். அதனைக் கடந்து சட்டவிரோதமாகவும் ஒளிபரப்புக் கருவிகளைப் பயன்படுத்தி ஒருசிலர் காற்பந்துப் போட்டிகளைக் காண்கின்றனர்.
சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியில் அப்படிப்பட்ட சாதனங்களை விற்பனை செய்த குற்றத்துக்கு லின் டா என்ற சிம்டர் டிரேடிங் அன்ட் பிஸ்னஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கு நான்கு மாதச் சிறையும் அவரது நிறுவனத்துக்கு $40,000 அபராதமும் தண்டனையாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் அவர்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார். பதிப்புரிமை பெற்ற இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்களையும் இன்னும் பல திரைப்படங்களையும் ஒளிபரப்பக்கூடிய சாதனங்களை லின் தெரிந்தே விற்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஒளிபரப்பு சாதனமும் தலா $49 முதல் $60 வரை விற்கப்பட்டன. அதன்வழியாக மாதம் $5,000 வரை நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் சீனாவிலிருந்தும் ஹாங்காங்கில் இருந்தும் சிம்டர் டிரேடிங் இந்த சாதனங்களை வரவழைத்து விற்றுவந்துள்ளது.
இங்கிலீஷ் பிரிமியர் லீக் அமைப்பின் நிறுவனர்கள் நேரடியாக சிம்டர் டிரேடிங்குக்கு 2020ஆம் ஆண்டில் எச்சரிக்கை விடுத்தும் அதன் செயல்பாடுகள் தொடர்ந்தன.
சிங்கப்பூரில் பதிப்புரிமைகொண்ட உள்ளடக்கங்களை சட்டத்துக்கு புறம்பாக வெளியிடுவதற்கு எதிராக தொடர்ந்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

