தெம்பனிசில் நண்பரைக் கத்தியால் குத்தியவருக்குச் சிறை

தெம்பனிசில் நண்பரைக் கத்தியால் குத்தியவருக்குச் சிறை

2 mins read
d75e21ce-48fd-46c1-be13-6256e3bcfe22
வேண்டுமென்றே காயம் உண்டாக்கிய குற்றச்சாட்டை 53 வயது சுஃபியான் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தண்டனை விதிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

நண்பருடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது, பொது இடத்தில் அவரைக் கத்தியால் குத்திய முகம்மது சுஃபியான் முகம்மது சப்ரி எனும் ஆடவருக்கு ஒன்பது மாதங்கள், 19 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கத்திக்குத்தால் பாதிக்கப்பட்டவரின் கல்லீரலில் ஆழமான காயம் ஏற்பட்டது.

வேண்டுமென்றே காயம் உண்டாக்கிய குற்றச்சாட்டை 53 வயது சுஃபியான் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தண்டனை விதிக்கப்பட்டது.

காயம்பட்ட 57 வயது ஆடவரை அவருக்குத் தெரியும் என்று கூறப்பட்டது. அவர்கள் இருவரும் மற்ற நண்பர்களுடன் தெம்பனிஸ் சென்ட்ரல் 1ல் சந்திப்பது வழக்கம்.

சென்ற ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி, உணவகமொன்றில் நண்பர்களுடன் இருவரும் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர், அடுத்த நாள் உணவகத்திற்குள் இன்னொரு நண்பருடன் இருப்பதை சுஃபியான் கண்டார்.

உணவகத்திற்கு வெளியே சுஃபியானுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே வாய்வார்த்தையில் தொடங்கிய சண்டை, மோதலில் முடிந்தது.

சுஃபியான், 13 சென்டிமீட்டர் கத்தியைக் கொண்டு நண்பரை இரண்டுமுறை தாக்கினார். அவரின் இடக்கையிலும் முதுகிலும் குத்திய பின்னர் கத்தியைக் கீழேபோட்டுவிட்டு சுஃபியான் ஓடிவிட்டார். காயமுற்றவர் அவரைத் துரத்த முயன்று தோற்றார்.

பாதிக்கப்பட்டவரைத் தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே பார்த்தவர்கள், காவல்துறைக்கு விவரம் தந்தனர். பின்னர் அவர், சாங்கிப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் நான்கு நாள் சிகிச்சை பெற்றார்.

ரத்தப்போக்கின் காரணமாக அவர் அறுவை சிகிச்சையின்போது குழப்பமான மனநிலையில் இருந்ததாக அரசாங்கத் துணை வழக்கறிஞர் இயோ கீ ஹுவான் கூறினார்.

வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்தைப் புரிவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்