கடன் வாங்கியவர் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய ஆடவருக்குச் சிறை

கடன் வாங்கியவர் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய ஆடவருக்குச் சிறை

2 mins read
குற்றச்செயல் வீட்டின் வெளியில் இருந்த கேமராவில் பதிவானது
33b1ee87-f23f-43ed-b71a-1f7ea1115de5
நிதி நெருக்கடியால் கடனீந்தோர் கேட்டுக்கொண்டபடி குற்றத்தைச் செய்ய ஒப்புக்கொண்டதாக ஆடவர் தெரிவித்தார். - படம்: ஏஷியா ஒன்

சிங்கப்பூரில் உள்ள வீட்டை தீயிட்டுக் கொளுத்த மலேசிய ஆடவர் ஒருவர் பணம் பெற்றுக்கொண்டு அவ்வாறு செயல்பட்டார்.

அந்த வீட்டு உரிமையாளர் பலரிடம் கடன்பெற்று, அவற்றை திரும்பத் தரமுடியாமல் தவித்துவந்தார். மோசடிக் குற்றங்களுக்காக அந்த 41 வயது ஆடவர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டும் வந்தார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, அதிகாலை 4.40 மணியளவில் வீட்டு உரிமையாளர், அவரது மனைவி, இரு குழந்தைகள், பெற்றோர், அவரது சகோதரி ஆகியோர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் இரும்பு வாயிற் கதவுகள் பூட்டப்பட்டு, வீடு தீயிடப்பட்டது.

வீட்டில் இருந்த அனைவரின் உயிருக்கும் ஆபத்து விளைவித்த அந்தப் பயங்கர விபத்தில் அனைவரும் தப்பித்துவிட்டனர். இம்மாதத் தொடக்கத்தில் வேலுப்பிள்ளை பி.சிவகுமார் என்ற அந்த 33 வயது மலேசியர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 19மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கடன்வாங்கி திரும்பத் தராதோர் வீடுகளை தீயிடும்படி வேலுப்பிள்ளையிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு $2,500 கொடுப்பதாகவும் அந்த நபர் கூறினார்.

நிதி நெருக்கடி

ஆரம்பத்தில் மறுத்த வேலுப்பிள்ளை, அப்போது தமது மனைவி கருவுற்றிருந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டு அதனால் நபரிடம் முன்பணமாக $400 பெற்றுக்கொண்டு அக்குற்றச் செயலைப் புரிந்தார். சட்டத்துக்கு எதிராக அக்குடும்பத்தைத் தடுத்துவைத்த குற்றமும் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

வீட்டின் வெளியில் கண்காணிப்புக் கருவி

வீட்டில் இருந்த முதியவர் தீயின் நெடியை உணர்ந்து அனைவரையும் எழுப்பியுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் தீயணைப்புப் படையால் காப்பாற்றப்பட்டதும் வெளியில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் வேலுப்பிள்ளையின் செயல் பதிவாகியிருந்தது. முகத்தை மறைத்தபடி வேலுப்பிள்ளை அக்காரியத்தைச் செய்தது காணொளியில் தெரிந்தது.

விசாரணைக்குப் பிறகு, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மலேசியக் காவல்துறை அவரைக் கைது செய்து சிங்கப்பூர் காவல்துறையிடம் அதே நாளில் ஒப்படைத்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்