லிட்டில் இந்தியா வட்டாரத்தில் 65 வயது மாது ஒருவரின் தங்கச் சங்கிலியை ஜூன் 11ஆம் தேதி 24 வயது ஆடவர் ஒருவர் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் பஃப்ளோ ரோடு அருகே நடந்ததாகவும் இதுகுறித்து தங்களுக்கு இரவு 10.37 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மக்களிடம் விசாரணை நடத்தியதுடன் காவல்துறை செயல்பாட்டு தளபத்திய நிலையத்துடன் அணுக்கமாகச் செயல்பட்டு மத்திய காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் ஆடவரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.
புகார் கிடைத்து ஒரு மணிநேரத்திற்குள் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதே நாளில் கர்பாவ் ரோடு அருகே இன்னொரு திருட்டுச் சம்பவத்துடனும் ஆடவருக்குத் தொடர்பு உள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் காட்டியுள்ளன.
தங்கச் சங்கிலியின் மதிப்பு $800 என்றும் அதனுடன் கைப்பேசி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆடவர் மீது ஜூன் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று கூறப்படுகிறது.
குற்றம் நிரூபணமானால் ஆடவருக்கு ஓராண்டிலிருந்து ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்