துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரிந்துகொண்டிருந்த கட்டுமான ஊழியர்மீது 62 கிலோ எஃகுக் கம்பி விழுந்ததில் அவர் உயிரிழந்தார். அந்த எஃகுக் கம்பியை அந்த ஆடவருக்கும் மேல் நின்று பணிபுரிந்துகொண்டிருந்த சக ஊழியர் அகற்றினார்.
இந்தச் சம்பவம் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் நிகழ்ந்தது. சீன நாட்டவரான 46 வயது திரு சான் ஃபுகுயிவுக்குத் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரு சான், சிகிச்சை பலனின்றி மாண்டார்.
இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள், விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று மரண விசாரணை அதிகாரி பிரெண்டா சுவா வலியுறுத்தினார்.
துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை துவாஸ் நெக்சஸ் டிரைவில் அமைந்துள்ளது. இது பொதுப் பயனீட்டுக் கழகத்துக்குச் (பியுபி) சொந்தமானது.
கட்டுமானத் தளத்தின் தரைத்தளத்தில் திரு சான் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவருக்கு மேல் திரு ஃபெங் ருஜுன் சாரக்கட்டுகள் தொடர்பான வேலையில் ஈடுபட்டிருந்தார்.
எஃகுக் கம்பியை அகற்றி இடம் மாற்ற திரு ஃபெங் முயன்றபோது அது கீழே விழுந்தது. அந்த 9.8 மீட்டர் நீளமுள்ள, 62 கிலோ எஃகுக் கம்பி ஏறத்தாழ 6.4 மீட்டர் உயரத்திலிருந்து திரு சான் மீது விழுந்தது.
திரு சான் அணிந்திருந்த தலைக்கவசம் உடைந்தது. அவர் சுயநினைவின்றி தரையில் கிடந்ததை உதவி மேலாளர் ஒருவர் பார்த்தார். திரு சான் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் மூளையில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மண்டை ஓடு முறிவு காரணமாக காலை 9.25 மணி அளவில் மரணமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
எஃகுக் கம்பியைத் தள்ளியபோது தமக்குக் கீழே யாரும் இல்லை என்றும் கம்பி திடீரென்று கண் சிமிட்டும் நேரத்தில் கீழே விழுந்தது என்றும் திரு சானை எச்சரிக்க நேரமில்லை என்றும் திரு ஃபெங் தெரிவித்தார்.
கவனக்குறைவுடன் செயல்பட்டு மரணம் விளைவித்ததற்காக 35 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக முதலில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த ஆடவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
திரு சானின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று காவல்துறை கூறியது. வேலையிட விபத்து காரணமாக திரு சான் மாண்டதாக விசாரணை நடத்திய பிறகு மனிதவள அமைச்சு தெரிவித்தது. இதை மரண விசாரணை அதிகாரி ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும், இந்த விபத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மனிதவள அமைச்சு திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

