செங்காங்கில் உள்ள ரசா ரசா காப்பிக் கடையில் இருந்த ஐபேடை திருடியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் அதை காவல் நிலையத்தில் திருப்பிக் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (மே 5) அங் மோ கியோவில் உள்ள காவல் நிலையத்தில் ஐபேடை திருப்பிக் கொடுத்தார்.
ஐபேடை சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணி வாக்கில் காவல் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கடையின் மேலாளர் கூறினார்.
வாடிக்கையாளர்களிடம் உணவுக் குறிப்பு எடுக்கப் பயன்படுத்தப்படும் அந்த ஐபேட் காணாமல் போனதாக கடையின் மேலாளர் மே 2ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கண்காணிப்புக் கேமராவில் பார்த்தபோது ஆடவர் ஒருவர் ஐபேடை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. அந்தக் காணொளியை சமூக ஊடகங்களிலும் அந்தக் கடை பதிவிட்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டது.
ஐபேட் மீண்டும் கிடைத்ததால் அதற்கு உண்டான விலையை தாம் கடைக்கு கொடுக்க தேவையில்லை என்று மேலாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

