பெண்களுடன் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க, தனது சிறுநீரில் மாவைக் கலந்து அதை அவர்களின் ஆடையில் தெளித்தார் டான் ஜுன் ஹாவ்.
அந்தப் பெண்களில் ஒருவர் மீது பலப் பிரயோகம் புரிந்ததை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 31 வயது மலேசியரான டானுக்கு வியாழக்கிழமை (ஜூன் 20) $1,200 அபராதம் விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் நிக்கல் நெடுஞ்சாலை பெருவிரைவு ரயில் நிலைய மின் படிக்கட்டில் மேலே ஏறிக்கொண்டிருந்த 26 வயது மாது ஒருவரை டான் பின்தொடர்ந்தார்.
பின் அருகிலிருந்த ஒரு மேம்பாலத்தில் அம்மாது நடந்து சென்றபோது சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்திருந்த கலவையை, மாதின் உடையில் டான் தெளித்தார்.
பிறகு அந்தப் பெண்ணிடம் நின்று பேசுவதற்கு பதிலாக அவரைக் கடந்து சென்றார்.
கலவையை முதலில் பறவை எச்சம் என நினைத்த மாது, மென் இழைத் தாளால் துடைக்க முயன்றபோது அக்கறை பெரிதாக வளர்ந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் பெண்களின், குறிப்பாக இளம் பெண்களின் அடர் வண்ண ஆடைகளில் கலவையைத் தெளித்து, பின்னர் அவர்களின் உடையில் கறைபட்டுள்ளதாகக் கூறுவது டானின் திட்டம் என்று அரசு துணை வழக்குரைஞர் யாப் ஜியா ஜுன் கூறினார்.
அறிமுகமில்லாத இரு பெண்களிடம் இச்செயலைப் புரிந்ததை டான் ஒப்புக்கொண்டார்.
“அந்தக் கலவையில் சேர்க்க அவர் வீட்டில் சிவப்புச் சாயம் தயாரித்திருந்ததாகவும் திரு யாப் தெரிவித்தார்.
டான் பிடிபடுவதற்கு முன்னர் அவரை அதிகாரிகள் எவ்வாறு கண்காணித்தனர் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.


