தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக் கணிதமும் ஆங்கிலமும் கற்றுக்கொடுக்க அமர்த்தப்பட்ட ஆடவர், அவரின் மாணவர்களை ஆடை மாட்டும் கம்பியால் அடித்தும் குத்தியும் பட்டினி போட்டும் சித்திரவதை செய்திருக்கிறார்.
ஒரு சிறுவனை, சொந்த சிறுநீரையே அருந்தவும் அவர் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
31 வயது சிங்கப்பூரர் வியாழக்கிழமை (ஜூலை 9) இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். பிள்ளைகளின் அடையாளத்தைப் பாதுகாக்க அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் வேண்டுமென்றே கடுமையான காயம் ஏற்படுத்தியது, மனிதவள அமைச்சுக்குத் தவறான அல்லது திசைதிருப்பும் தகவல்களை வழங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளில் ஆடவர் குற்றவாளி என்பது நிரூபணமானது.
அவருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
ஆடவரின் உறவினர், கல்வி நிலையமொன்றை நடத்திவந்தார். அது மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் தங்குமிடத்துடன் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிர்வாக ஆலோசனைச் சேவைகளையும் வழங்கியது. 2016ஆம் ஆண்டில் அவர் நிர்வாகியாக வேலைக்கு எடுக்கப்பட்டார்.
அங்கு தங்கியிருந்த மாணவர்களைக் கவனித்துக்கொள்வது, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தருவது, அவர்களின் வீட்டுப்பாடங்களைச் சரிபார்ப்பது ஆகிய பொறுப்புகள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன.
குழந்தைப் பராமரிப்பு அல்லது கற்பித்தல் தகுதி எதுவும் இல்லாத நிலையிலும் அவருக்கு இந்த வேலை வழங்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
2023ஆம் ஆண்டு ஜனவரியில் அந்த நிலையத்திற்கு வந்த சீனாவைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவனை, அவர் அடிக்கடி தண்டித்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பல்வேறு தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அந்தச் சிறுவனுக்கு ரொட்டியும் தண்ணீருமே உணவாகக் கொடுக்கப்பட்டன.
2023ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி, ஆங்கிலப் பாடம் படித்தபோது சிறுவனை புஷ்-அப் நிலையில் இருக்குமாறு ஆடவர் கூறினார். பிற்பகல் 3.45 மணியிலிருந்து அடுத்த நாள் காலை வரை சிறுவனை அதேநிலையில் இருக்கும்படி செய்திருக்கிறார் ஆடவர். சிறுவன் பசிப்பதாகக் கூறி அழுதிருக்கிறான். மற்ற மாணவர்களை இரவு உணவு சாப்பிட ஆடவர் அனுமதித்தார். அதன்பிறகும் ஆடவர் சிறுவனைத் துன்புறுத்தியுள்ளார்.
ஆடவர் மற்றச் சிறுவர்களைத் துன்புறுத்தியதும் தெரியவந்தது.

