8.6 கிலோகிராம் கஞ்சாவை சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற மலேசிய இளையர் கைது

8.6 கிலோகிராம் கஞ்சாவை சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற மலேசிய இளையர் கைது

1 mins read
9dc36c7d-55da-4f08-98f6-4a1552598689
மலேசியாவைச் சேர்ந்த 22 வயது ஆடவர், 8.6 கிலோகிராம் கஞ்சாவையும் 1.5 கிலோகிராம் மெத்தம்ஃபெட்டமினையும் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்றபோது பிடிபட்டார். - படம்: சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் குடிநுழைவு, சோதனைச்சாவடி வழியாகப் போதைப்பொருள்களைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற 22 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 1ஆம் தேதி, மலேசியாவைச் சேர்ந்த அந்த ஆடவர், 8.6 கிலோகிராம் கஞ்சாவையும் 1.5 கிலோகிராம் மெத்தம்ஃபெட்டமினையும் காரில் வைத்து நாட்டுக்குள் கடத்த முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் சம்பவம் குறித்து புதன்கிழமை (ஆகஸ்ட் 4) அறிக்கை வெளியிட்டது.

சம்பந்தப்பட்ட ஆடவரின் காரில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டபோது அதன் பின்பகுதியில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்கள் அடங்கிய பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

ஆடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு $361,000க்கும் அதிகமாக இருக்கும் என்ற ஆணையம், அவை கிட்டத்தட்ட 2,132 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்திற்கு உட்கொள்ள போதுமானவை என்றும் குறிப்பிட்டது.

சம்பவம் தொடர்பில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்துகிறது.

சிங்கப்பூருக்குள் 250 கிராமுக்கும் அதிகமான ஐஸ் அல்லது 500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கொண்டுவருவோர் மரண தண்டனையை எதிர்நோக்குவர். சிங்கப்பூரிலிருந்து அதே அளவு போதைப்பொருள்களை ஏற்றுமதி செய்வோருக்கும் அது பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்
போதைப் பொருள்கடத்தல்மலேசியர்ஆடவர்கைதுஉட்லண்ட்ஸ்சோதனைச் சாவடி