சாங்கி விமான நிலையத்தில் பயணப்பெட்டியைச் சோதனை செய்தபோது, கிட்டத்தட்ட $400,000 மதிப்புள்ள வர்த்தக அட்டைகளைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற ஆடவர் ஒருவரை நவம்பர் 2ஆம் தேதி குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் பிடித்தனர்.
சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்திற்குச் சென்ற அந்த ஆடவர், பயணப்பெட்டிச் சோதனைப் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஆணையம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தது.
தன்னிடம் இரண்டு வர்த்தக அட்டைகள் மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், தீவிரச் சோதனைக்குப் பிறகு, அதிகாரிகள் ‘ஒன் பீஸ்’ (One Piece) மங்கா, அனிமே தொடர்கள் தொடர்பான கிட்டத்தட்ட $400,000 மதிப்புள்ள 105 வர்த்தக அட்டைகளையும் ஒரு சொகுசுக் கைக்காப்பையும் கண்டெடுத்தனர்.
அரிதான ‘ஒன் பீஸ்’ வர்த்தக அட்டைகள் ஆயிரக்கணக்கான வெள்ளிக்கு விற்கப்படலாம். மே மாதத்தில் நடந்த ஓர் ஏலத்தில், மங்கி டி. லூஃபி (Monkey D. Luffy) இடம்பெற்ற கொரியத் தொடர் முதல் பரிசு அட்டை US$440,420 (S$563,535) விலைக்குப் போனது.
அண்மையச் சம்பவம் மேல் விசாரணைக்காகச் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.
வெளிநாடுகளில் வாங்கப்பட்ட பொருள்கள் வரிவிலக்கு சலுகை, பொருள், சேவை வரி நிவாரண வரம்பைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், பயணிகள் அவற்றைப் பற்றித் தெரிவித்து, அதற்கான தீர்வையையும் பொருள், சேவை வரியையும் செலுத்தவேண்டும் என்பதை ஆணையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது.
