விமான நிலையத்தில் பெண்ணை இழிவுபடுத்தியதாக ஆடவர் மீது இரு குற்றச்சாட்டுகள்

1 mins read
9d8345a3-ed6d-4f31-81da-e2626bd4dfd9
சாங்கி விமான நிலையம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லண்டன் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த ஆடவர் ஒருவர் சாங்கி விமான நிலையத்தில் களேபரத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தான் தொலைத்த கைப்பேசியைத் தேடுவதற்காக விமானத்தில் ஏறும் நுழைவாயில் பகுதியிலிருந்து திரும்பிச் செல்ல அனுமதி தரப்படாததால் அந்த ஆடவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரான 57 வயது ரிச்சர்ட் மைக்கல் ரோல் பரிட்ஜ் என்பவர் மீது, பிறருக்குத் தொந்தரவு இழைத்ததாகவும் தொல்லை தந்ததாகவும் திங்கட்கிழமை (மார்ச் 17) இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படும் நாளிலிருந்து சில நாள்களுக்குப் பிறகே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ன.

வரும் வியாழக்கிழமை (மார்ச் 20) அவர் குற்றங்களை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த அவர், இம்மாதம் ஏழாம் தேதி மாலை சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் உள்ள B5 நுழைவாயிலில் தகாத வார்த்தைகளைக் கொண்டு ஒரு மாதை இழிவுபடுத்தியதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிட்ஜ், நுழைவாயிலிருந்து விமானத்தில் ஏறுவதற்காக எழுப்பப்படும் பாலத்தின் (aerobridge) சுவரை உதைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தனது கைப்பேசியைத் தொலைத்ததை உணர்ந்தபோது பரிட்ஜ், லண்டனுக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறிக்கொண்டிருந்ததாக காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அது, எந்த விமானம் என்பது குறித்த தகவல்கள் நீதிமன்ற ஆவணங்களில் வெளிளிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்