காலாங் ஆற்றில் ‘சுத்தப்படுத்திக்’ கொண்டதாகச் சொன்ன ஆடவர்: விசாரிக்கும் பியுபி

2 mins read
a7f31acf-b961-443c-9e40-7d8cc9cea73f
காலாங் ஆறு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காலாங் ஆற்றில் ‘சுத்தப்படுத்திக்’ கொண்டதாக ஆடவர் ஒருவர் சொன்னதைத் தொடர்ந்து தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, விசாரணை மேற்கொண்டுள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதி காலை மணி 8.35க்குச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் பற்றி முதன்முதலில் ஸ்டோம்ப், ஜனவரி 22ஆம் தேதி தகவல் வெளியிட்டது. ஆற்றில் குளித்துவிட்டு ஆடவர் சட்டை அணியும் நிழற்படங்களை ஜேசன் என்பவர் பகிர்ந்துகொண்டார்.

அதுபற்றி ஆடவரிடம் கேள்வி எழுப்பியதாக ஸ்டோம்ப்பிடம் ஜேசன் சொன்னார். ஆனால் ஆடவர், தம்மைச் ‘சுத்தம்’ செய்துகொள்வதாக அவரிடம் பதிலளித்தார். இந்துக்களுக்கு அது சிறப்பான நாள் என்றும் ஆடவர் கூறினார்.

ஜேசன், தமது சமூக மன்றத்தில் அதே நாள் பின்னேரத்தில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அறுவடைத் திருவிழாவான பொங்கல், இவ்வாண்டு ஜனவரி 14 முதல் 17 வரை கொண்டாடப்பட்டது.

ஸ்டோம்ப்புக்கு அனுப்பிய அறிக்கையில் தேசியத் தண்ணீர் அமைப்பான பியுபி, சம்பவத்தை விசாரிப்பதாகக் கூறியது. யாரேனும் தவறு செய்திருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

“அனுமதியின்றி ஆற்றுக்குள் நுழைவோருக்கு $3,000 வரை அபராதம் விதிக்கப்படும்,” என்று அதன் அறிக்கை சுட்டியது.

நீர்வழிகள், கால்வாய்கள், வடிகால்கள் முதலியவற்றுக்குள் அனுமதியின்றிப் பொதுமக்கள் நுழைவது சட்டத்திற்குப் புறம்பானது என்று பியுபியின் பேச்சாளர் கூறினார்.

“பெருமழையின்போது திடீரென்று ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதனால் அத்துமீறி அத்தகைய நடவடிக்கையில் இறங்கினால் அது ஆபத்தில் முடியலாம்,” என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

சிங்கப்பூரில் உள்ள ஆறுகளில் ஆக நீளமானது காலாங் ஆறு.

குறிப்புச் சொற்கள்