பூன் லே எம்ஆர்டி நிலைய ரயில் தண்டவாளத்தில் விழுந்த கைப்பேசியை எடுக்க தளமேடைத் தடுப்புகள்மீது ஏறிய ஆடவர் ஒருவரை எஸ்எம்ஆர்டி நிறுவனம் தடுத்துவைத்தது.
இச்சம்பவம் வியாழக்கிழமை (மார்ச் 13) காலை 8.15 மணியளவில் நிகழ்ந்ததாக எஸ்எம்ஆர்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
தளமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையே உள்ள 1.5 மீட்டர் உயரத் தடுப்புகள்மீது அந்த ஆடவர் ஏறுவதைக் கண்ட மற்றொரு பயணி, அவசரப் பொத்தானை அழுத்தினார்.
அப்பொத்தான் அழுத்தப்படும்போது, ரயில்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதோடு ரயில் நிலைய ஊழியர்கள் நிலவரத்தைக் கையாளுவர்.
இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் தலைவர் லாம் ஷியவ் காய், “உரிய நேரத்தில் அவசரப் பொத்தான் அழுத்தப்பட்டதால், அவ்வழியாக வந்துகொண்டிருந்த ரயில் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர் காயமின்றித் தப்பினார்.
“எங்கள் ஊழியர்கள் உடனடியாக விரைந்து, அத்துமீறியவரைத் தடுத்துவைத்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்,” என்றார்.
தளமேடைத் தடுப்புகள்மீது ஏறியவரை ரயில் மோதியிருக்கலாம் என்பதால், இந்தச் சம்பவத்தைத் தான் கடுமையானதாகக் கருதுவதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
பயணிகள் எல்லா நேரங்களிலும் தண்டவாளத்தைவிட்டு விலகியிருக்க வேண்டும். ஏதாவது பொருள் தண்டவாளத்தில் விழுந்தால், எஸ்எம்ஆர்டி ஊழியர்களை அணுகி, அவர்கள் உதவி கோர வேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காக, அந்தப் பொருளை அன்றைய நாள் இறுதியில் மட்டுமே எடுக்க முடியும் என்றது எஸ்எம்ஆர்டி.

