சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகே ஆடவர் ஒருவரைத் தள்ளிவிட்டதாக நம்பப்படும் நபர் மீது ஒரு பெண்ணின் தலைமுடியை இழுத்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரான லேகா பவன் எனும் 21 வயது ஆடவர், சிங்கப்பூர் ஆற்றில் வேறோர் ஆடவரைத் தள்ளிவிட்டதாக நம்பப்படுகிறது. அதனால் தள்ளிவிடப்பட்ட ஆடவர் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அதே நாள் இரவில் லேகா பவன், ஒரு பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று இரவு சுமார் எட்டு மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த லேகா பவன் மீது புதன்கிழமையன்று (நவம்பர் 20) அக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பெண்ணுக்கும் அவருக்கும் இடையிலான உறவு, சம்பவத்துக்குப் பின்னால் உள்ள காரணம் ஆகிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.