ஃபாஜார் எல்ஆர்டி நிலையத் தண்டவாளத்தில் விழுந்தவர் மருத்துவமனையில் மரணம்

ஃபாஜார் எல்ஆர்டி நிலையத் தண்டவாளத்தில் விழுந்தவர் மருத்துவமனையில் மரணம்

படங்கள்: டிக்டாக்

28 Nov 2025 - 8:37 pm

1 mins read

ஃபாஜார் எல்ஆர்டி நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்த 64 வயது ஆடவர், மருத்துவமனையில் மாண்டார்.

நவம்பர் 19ஆம் தேதி காலை 9.35 மணி அளவில் தனிநபர் நடமாட்டச் சாதனம் பயன்படுத்திய ஆடவர் தண்டவாளத்தில் விழுந்ததாக எஸ்எம்ஆர்டி டிரேன்ஸ் தலைவர் லாம் ஷியூ காய், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு எல்ஆர்டி நிலைய ஊழியர்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.

காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் திரு லாம் தெரிவித்தார்.

தண்டவாளத்துக்கான மின்சார இணைப்பை ஊழியர்கள் உடனடியாக முடக்கியதால் தண்டவாளத்தில் விழுந்த ஆடவர் மீது ரயில் மோதவில்லை என்றார் அவர்.

காவல்துறை விசாரணையில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் உதவி வருவதாக திரு லாம் குறிப்பிட்டார்.

தண்டவாளத்தில் விழுந்த ஆடவர் சுயநினைவின்றிக் கிடந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர் உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஆடவரின் மரணத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்