ஈசூனில் பெண்ணைக் கத்திமுனையில் பிணைபிடித்த ஆடவருக்கு விதிக்கப்பட்ட 6 பிரம்படிகள் ரத்து

ஈசூனில் பெண்ணைக் கத்திமுனையில் பிணைபிடித்த ஆடவருக்கு விதிக்கப்பட்ட 6 பிரம்படிகள் ரத்து

2 mins read
318d966a-9fe5-44ad-bf88-a6517ca833fd
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று 60 வயது பெண்மணி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து பிணைபிடித்த முகம்மது ஃபைசால் முகம்மது அரிஃப். - படம்: பெரித்தா ஹரியான்

ஈசூன் வட்டாரத்தில் 2023ஆம் ஆண்டில் 60 வயது பெண்மணி ஒருவரைக் கத்திமுனையில் பிணைபிடித்த ஆடவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆறு பிரம்படிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

43 வயது முகம்மது ஃபைசால் முகம்மது அரிஃப்பின் உடல்நலத்தைக் காரணம் காட்டி அவருக்கு விதிக்கப்பட்ட பிரம்படிகள் ரத்து செய்யப்பட்டன.

அதற்குப் பதிலாக அவருக்குக் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை என்று செப்டம்பர் 16ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.

ஃபைசாலுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்பு குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

போதைப்பொருள் உட்கொண்டது, தொல்லை விளைவித்தல், கடத்தல், காவல்துறை அதிகாரியைத் தாக்கியது ஆகிய குற்றங்களுக்காக ஃபைசாலுக்கு ஜூலை மாதம் எட்டு ஆண்டுகள், ஒரு மாதச் சிறைத் தண்டனையுடன் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று ஃபைசால் போதைப்பொருள் உட்கொண்டு ஈசூன் வட்டாரத்தில் கத்தியுடன் நடந்துகொண்டிருந்தார்.

காவல்துறையிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்நிலையில், புளோக் 108 ஈசூன் ரிங் சாலையின் தரைத்தளத்தில் தமது உறவினருக்காகக் காத்துக்கொண்டிருந்த பெண்மணி ஃபைசாலைப் பார்த்ததும் அருகில் இருந்த காப்பிக்கடைக்குச் செல்ல முயன்றார்.

ஆனால் காவல்துறை அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தப் பெண்ணைக் கேடயமாகப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிக்க ஃபைசால் திட்டமிட்டார்.

அப்பெண்ணை மடக்கிப் பிடித்து, கத்தியை அவர் கழுத்துக்குக் கொண்டு சென்று அப்பெண்ணை ஃபைசால் பிணைபிடித்தார்.

அவரை அமைதிப்படுத்த அதிகாரிகள் முயன்றனர்.

அப்பெண்ணை விட்டுவிடும்படி ஃபைசாலிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் ஃபைசால் அப்பெண்ணை விடுவிக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து, சம்பவ இடத்தை மேலும் பல காவல்துறை அதிகாரிகள் அடைந்தனர்.

அவர்கள் ஃபைசாலை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து கத்தியைப் பறித்தனர்.

ஃபைசால் கைது செய்யப்பட்டார்.

அப்பெண்ணை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

அவரது முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனால் அவர் மருத்துவ உதவி நாடவில்லை.

கடத்தல் குற்றத்துக்காக ஏழாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்