பூனைகளைத் துன்புறுத்தி, அவற்றில் இரண்டை வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே எறிந்து கொன்ற குற்றத்திற்காக 14 மாதச் சிறை விதிக்கப்பட்டவருக்கு புதன்கிழமை (ஜூலை 9) உயர் நீதிமன்றம் 27 மாதங்களாக சிறைத் தண்டனையை உயர்த்தியது.
பிப்ரவரி மாதம் மாவட்ட நீதிபதி ஒருவரால் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்ததை அடுத்து, 33 வயதான பாரி லின் பெங்லிக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை அனுமதித்த, நீதிபதி வின்சென்ட் ஹூங், விலங்குகளை வதைக்கும் லின்னின் செயல்கள் நீதிமன்றத்துக்கு வந்த மிகவும் கொடூரமான விலங்குவதை வழக்குகளில் ஒன்று என்றார்.
அங் மோ கியோ வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டையில் பூனைகள் சுற்றித் திரிவதை அறிந்ததால் அப்பகுதியை லின் குறிவைத்தார்.
குற்றச் செயல்கள் நிகழ்ந்த இடங்களிலிருந்து பூனைகளின் உடல்களை அப்புறப்படுத்துவதன் மூலம் லின் தனது குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றார் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
லின்னின் வன்முறைக்கு அவரது மோசமான மனச்சோர்வுக் கோளாற்றை குறிப்பிடத்தக்க காரணியாக மாவட்ட நீதிபதி கருதியது தவறு என்றும் நீதிபதி ஹூங் கூறினார்.
லின்னின் மனச்சோர்வு சுய கட்டுப்பாட்டையோ தனது செயல்களின் தவற்றைப் புரிந்துகொள்ளும் அவரது திறனையோ பாதிக்கவில்லை என்பதை நீதிபதி ஹூங் சுட்டினார்.
விலங்குவதைச் சம்பவங்களில் தண்டனை விதிக்கும்போது நீதிமன்றம், அக்குற்றச் செயல்களின் பின்விளைவுகள் குறித்து அச்சத்தை ஏற்படுத்துவதைக் கவனத்தில் கொள்ளலாம் என்றார் அவர்.
2014ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் அதிகபட்ச தண்டனையை $10,000 அபராதம், ஓராண்டு சிறையிலிருந்து $15,000 அபராதம், 18 மாத சிறையாக அதிகரித்து சட்டத்தை வலுப்படுத்தியது.
இருப்பினும், விலங்குவதை, நலவாழ்வு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது என்று நீதிபதி ஹூங் குறிப்பிட்டார்.
2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை, விலங்குகளைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும், ஆண்டுக்கு சராசரியாக 1,200 சம்பவங்களை தேசிய பூங்காக் கழகம் விசாரித்தது.

