தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துன்புறுத்திய தந்தையை இறக்கும் வகையில் தாக்கியவருக்குச் சிறை

2 mins read
109ae657-c63e-47d8-adfc-379ce6eae932
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது தந்தை சாகும் அளவிற்குத் தாக்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சியா ஜியே சிலெஸ்நார் என்று இப்போது 21 வயதாகும் அவர், நோக்கமில்லாமல் மரணம் விளைவித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 30) ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சியாவின் தந்தை, அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தந்தை, மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் சியா, அவரின் தாய், வயதில் மூத்த சகோதரிகள் இருவர் ஆகியோரைத் துன்புறுத்தி வந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பெண்களுக்கான ஆடைகளை அணிவித்து அவர்களைப் போல் நடந்துகொள்ளும் நபர்களைக் (transvestite) குறிக்கும் வார்த்தையால் சியாவை அவரின் தந்தை இழிவுபடுத்தினார். ஒருவரை வெட்டிப் போடும் துணிச்சல் இருக்கிறதா என்று கேட்டும் அவமானப்படுத்தினார்.

அப்போது நிலைமை முற்றிப்போனது. ஆத்திரமடைந்த சியா, ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியால் தந்தையின் நெஞ்சில் வெட்டினார்.

இளம் வயதில் குண்டர் கும்பல் சண்டைகளில் ஈடுபட்ட தந்தை, தன்னைக் கொன்றுவிடக்கூடும் என்று சியா அஞ்சினார். அதனால் இரண்டு கத்திகளைக் கொண்டு 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று அவர், சியா வீ தெக் எடி எனும் தனது 47 வயது தந்தையைக் தாக்கினார்.

அவர்கள் வசித்த ஈசூன் அவென்யூ நான்கு வீவக புளோக் 653ன் ஐந்தாம் தளத்தில் உள்ள மின்தூக்கிக்கு அருகே அச்சம்பவம் நிகழ்ந்தது. வேகமாகக் கொல்லும் நோக்கில் சியா, தந்தையின் தலையையும் கழுத்தையும் குறிவைத்துத் தாக்கினார்.

புளோக்கின் நான்கு, ஐந்தாம் தளங்களுக்கிடையே இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

அண்டை வீட்டார் ஒருவரின் வீட்டு வாசலில் தந்தை ரத்த வெள்ளத்தில் மயங்கினார். தந்தையைப் பற்றி கவலைகொண்ட சியா, அங்கு இருந்திருக்கக்கூடியோரை காவல்துறையினரை அழைக்குமாறு பலத்த குரல் எழுப்பினார்.

தந்தை மயங்கியவுடன் சியா உணர்ச்சி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

சியா தனது தந்தையிடம், “நான் பலகாலமாக உங்களை வெறுத்திருக்கிறேன்,” என்றிருக்கிறார்.

அதற்குத் தந்தை, “என்னை மன்னித்துவிடு. உன் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடு,” என்று பதிலளித்திருக்கிறார். சம்பவ இடத்தில் சியா, உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு தந்தை அவரிடம் சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வெட்டுக் காயங்களால் கழுத்தில் ஏற்பட்ட மோசமான ரத்தக் கசிவால் தந்தை மாண்டார் என்று உடற்கூராய்வில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்