இத்தாலிய ஆடவர் ஒருவர், துபாயில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த சிங்கப்பூர் பெண்ணை ஏமாற்றி ஈர்த்து அவரைக் கடத்திச் சென்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள அஷ்ராஃப் அர்யாவ், 31, ஒருவரை துபாயில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் அவரை ஏமாற்றி வேலைக்கு எடுத்ததாக சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டுக்கு நீதிமன்ற விசாரணை கோரியிருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட அனுமதி இல்லை.
அர்யாவ், டிண்டர் தளத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணைக் குறிவைத்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். விமானியாகப் பணிபுரியும் தான் கத்தாரைச் சேர்ந்த செல்வந்தர் என்றும் பெண்ணை மணமுடிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கத்தாருக்குள் நுழைய 10,000 டாலர் (12,725 வெள்ளி) தொகை தன்னிடம் இருப்பதைக் காட்டுமாறு அர்யாவ், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கூறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். பணத்தைப் புரட்ட பாலியல் சேவைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டு பாலியல் நடவடிக்கைகளின் மூலம் பரவும் நோய்க்குப் பெண் ஆளாகும் வரை அவர் சம்பாதித்த பணத்தை அர்யாவ் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது பெண்ணுக்கு 30லிருந்து 31 வயதாகியிருந்தது.
பாலியல் தொழிலில் ஈடுபடப் பெண் முதலில் மறுத்தாலும் கத்தாரில் அர்யாவை மணமுடிக்க அதுவே ஒரே வழி என்று நம்பியதால் அவ்வாறே செய்தார்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெண்ணின் தாய், காவல்துறையின் உதவியை நாடினார். வேறு குற்றத்தின் தொடர்பில் அர்யாவ், 2023 நவம்பர் மாதம் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார்.
வரும் ஜூலை மாதம் தீர்ப்பளிக்கப்படும்.

