வெளிநாட்டு ஊழியர் ஐவர்க்குத் தொடர்ந்து வேலை வழங்குவதற்காக அவர்களிடம் பணம் கேட்ட முன்னாள் மேலாளர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (நவம்பர் 11) வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் ‘800 சூப்பர் வேஸ்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தில் பணியாற்றிய கோ கிம் சியா என்பவருக்கு 49 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ், வெளிநாட்டு ஊழியர் ஐவர் தொடர்புடைய ஐந்து குற்றச்சாட்டுகளைக் கோ ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பு விதிக்கப்பட்டபோதும் மேலும் 19 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. நகர மன்றங்களுக்குத் தூய்மை, பராமரிப்பு சேவைகளை வழங்கும் துப்புரவுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதும் நிர்வகிப்பதும் கோவின் பொறுப்பாக இருந்தது
ஊழியர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்களையும் புதுப்பிப்பையும் அவர் கையாண்டார்.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் ஜூலைக்கும் இடையில் புலம்பெயர்ந்த ஊழியர்கள் ஐவரிடமிருந்து கையூட்டாக $2,000 முதல் $4,000 வரை மொத்தம் S$18,000 தொகையைப் பெற்றதை கோ ஒப்புக்கொண்டார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வேலைக்காக லஞ்சம் கேட்பதோ பெறுவதோ கடுமையான குற்றம் என்று இந்த விவகாரம் குறித்து மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கையூட்டு கேட்பது அல்லது பெறுவது தொடர்பிலான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக S$30,000 அபராதமோ இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
தங்களிடம் கையூட்டு கேட்கப்படுவதாகச் சந்தேகிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உதவிக்கு மனிதவள அமைச்சை 6438 5122 என்ற எண்ணிலோ அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தை 6536 2692 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
