இனிமேல் கட்டப்படும் புதிய தனியார் கட்டடங்களில் ஒரு பகுதியை உணவு மற்றும் பொருள்களை விநியோகிப்போர் காத்திருப்பதற்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும்.
அதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்டு வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தெரிவித்து உள்ளன.
அதற்கு முன்னோடியாக, தற்போதைய குடியிருப்பு, வர்த்தகக் கட்டடங்களுக்கு சில உதவிக் கருவிகள் வழங்கப்படும். விநியோக ஊழியர்கள் காத்திருக்கும் இடம் என்பதைக் காட்ட தரையில் ஒட்டப்படும் வில்லைகளும் அதில் ஒன்று.
முன்னதாக, அது பற்றி தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
உதவிக் கருவிகள் மூலம் காத்திருக்கும் இடங்களை ஒதுக்கிக் காட்டுவது விநியோக ஓட்டுநர்கள் தங்களது பணியை சுலபமாகவும் பத்திரமாகவும் நிறைவேற்ற உதவும் என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
கட்டட மேம்பாட்டுப் பிரதிநிதிகள் உதவிக் கருவிகளுக்கு https://go.gov.sg/deliverytoolkit என்னும் தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
உதவிக் கருவிகள் அடங்கிய பெட்டி வழங்குவது என்பது இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள நடவடிக்கைகளில் ஒன்று.
தனியார் கட்டடங்களை விநியோக ஊழியர்களுக்கு மேலும் சாதகமான ஓர் இடமாக மாற்ற அத்தகைய நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்து ஆணையமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
2023 நவம்பரில் ஏற்படுத்தப்பட்ட விநியோக நடைமுறைக்கான முத்தரப்பு பங்காளி பணிக்குழுவை இந்த இரு அமைப்புகளும் வழி நடத்துகின்றன.
விநியோக நடைமுறையின் செயல்திறனை மேம்படுத்தவும் இணையவழி ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொருள்களைப் பெறுவதிலும் அவற்றை விநியோகிப்பதிலும் உள்ள சிரமங்களைக் குறைக்கவும் தேவைப்படும் வழிகளை ஆராய அந்தப் பணிக்குழு நிறுவப்பட்டது.
அரசாங்க அமைப்புகள், தொழிற்சங்கங்கள், குடியிருப்பு மற்றும் அலுவலக மேம்பாட்டு நிறுவனங்கள், தொழிற்துறை கூட்டமைப்புகள் போன்றவை அந்தப் பணிக்குழுவில் அங்கம் வகிக்கின்றன.

