கடும் வெப்பத்திலிருந்து ஊழியர்களைக் காக்க கட்டாய நடைமுறைகள்

கடும் வெப்பத்திலிருந்து ஊழியர்களைக் காக்க கட்டாய நடைமுறைகள்

3 mins read
71a714b5-3c75-4d4d-a2be-eb32616e4744
பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிசெய்ய ‘சாயில்பில்ட்’ நிறுவனம் மேற்கொண்டுள்ள சிறப்பான வெப்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பார்வையிட்டார். - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இனிவரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளிப்புற ஊழியர்களைப் பாதுகாக்கப் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாண்டு டிசம்பர் 1 முதல், வெளிப்புறங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வியர்வையை எளிதில் உறிஞ்சக்கூடிய, நல்ல காற்றோட்டமான ஆடைகளை முதலாளிகள் கட்டாயம் வழங்க வேண்டும்.

வெப்பத்தால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைச் சமாளிக்க, வேலைத்தளங்களில் பனிக்கட்டிகள் அல்லது நீரைத் தெளிக்கும் கருவிகள் அவசரத் தேவைக்குத் தயாராக இருப்பதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்.

அத்துடன் வேலை செய்யும் இடங்களிலேயே குளிர்ந்த குடிநீரும் கிடைக்கச் செய்யவேண்டும்.

மேலும், ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, இந்த வெப்பப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அனைவருக்கும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

புதிதாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நான்கு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதோடு வேலைநிறுத்த உத்தரவு போன்ற கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும் பாயக்கூடும்.

ஊழியர்கள் தொடர்ந்து தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்தல், புதிய ஊழியர்களை வேலைக்கு அனுப்புமுன் அவர்களைப் படிப்படியாக வெப்பத்திற்குப் பழக்கப்படுத்துதல் ஆகியவை ஏற்கெனவே நடப்பில் உள்ள நடைமுறைகளில் அடங்கும்.

துவாஸ் சவுத் அவென்யூ 5ல் அமைந்துள்ள ‘சாயில்பில்ட்’ (SoilBuild) நிறுவனத்தின் ‘பிஎஸ்ஏ’ விநியோகச் சங்கிலி நடுவத்தின் (PSA Supply Chain Hub) கட்டுமானத் தளத்திற்கு மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) வருகை தந்தபோது இவற்றை அறிவித்தார்.

‘சாயில்பில்ட்’ நிறுவன அதிகாரிகளுடன் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
‘சாயில்பில்ட்’ நிறுவன அதிகாரிகளுடன் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். - படம்: பே. கார்த்திகேயன்

இந்த நடைமுறைகள் முதன்முதலில் 2024ல் பரிந்துரைகளாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் திரு தினேஷ் சுட்டிக்காட்டினார். ஈராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இவற்றை இப்போது கட்டாயமாக்குவது அவசியம் என அமைச்சு கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

2023 முதல் 2025 வரை, அதிக வெப்பத்தால் ஏற்பட்ட நோய்களால் ஆண்டுக்குச் சராசரியாக ஆறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெப்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகளைக் கொண்டிருந்த 56 நிறுவனங்கள்மீது அபராதம் உள்ளிட்ட அமலாக்க நடவடிக்கைகளை அமைச்சு எடுத்துள்ளது.

“முதலாளிகள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்கள் என நம்புகிறோம். இவற்றைச் செயல்படுத்த இந்த ஆண்டு இறுதி வரை கிட்டத்தட்ட மூன்று மாத கால அவகாசம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்றார் திரு தினேஷ்.

ஊழியர்களைப் பாதுகாப்பது முதலாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்று வலியுறுத்திய திரு தினே‌ஷ், ஊழியர்கள் உடல்நலத்துடன் பாதுகாப்பாக வேலை செய்யும்போது வேலை தடைபடும் நேரம் குறைந்து உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்றும் அதன்வழி வியாபாரம் தடையின்றி நடக்கும் என்றும் கூறினார்.

புதிய பரிந்துரைகளும் நடப்பில் உள்ள விதிகளும்

கட்டாய விதிகளுடன், ஊழியர்கள் ஓய்வெடுக்கும் இடங்கள் நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்ற புதிய பரிந்துரை ஒன்றையும் அமைச்சு முன்வைத்துள்ளது. முடிந்தால் அந்த இடங்களைக் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைத்துத் தர முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அதிக வெப்பத்துடன் மூடுபனியும் சேர்ந்து ஏற்படும் பட்சத்தில், ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் வழங்குதல் போன்ற நடப்பில் உள்ள தற்காப்பு நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தினேஷ் கூறினார்.

சிறப்பான முன்னுதாரணமாகச் செயல்படும் ‘சாயில்பில்ட்’ நிறுவனம்

பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிசெய்ய ‘சாயில்பில்ட்’ நிறுவனம் மேற்கொண்டுள்ள சிறப்பான வெப்பப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திரு தினேஷ் பார்வையிட்டார்.

துவாஸில் உள்ள ‘சாயில்பில்ட்’ நிறுவனத்தின் ‘பிஎஸ்ஏ’ விநியோகச் சங்கிலி நடுவக் கட்டுமானத் தளத்தில் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (இடது) மின்விசிறி பொருத்தப்பட்ட சிறப்பு ஆடையை அணிந்து பார்க்கிறார்.
துவாஸில் உள்ள ‘சாயில்பில்ட்’ நிறுவனத்தின் ‘பிஎஸ்ஏ’ விநியோகச் சங்கிலி நடுவக் கட்டுமானத் தளத்தில் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (இடது) மின்விசிறி பொருத்தப்பட்ட சிறப்பு ஆடையை அணிந்து பார்க்கிறார். - படம்: பே. கார்த்திகேயன்

டபிள்யூபிஜிடி’ வெப்பநிலையை நிகழ் நேரத்தில் கண்காணிக்கும் கருவிகளைச் சோதனை செய்வது, விசிறிகளுடன் கூடிய ஓய்வுப் பகுதிகளை அமைப்பது, முதலுதவி அறைகளைக் குளிரூட்டப்பட்ட வசதியுடன் தயார் நிலையில் வைத்திருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவனம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது.

மேலும், ஊழியர்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கும் சிறப்பு ஆடைகளைப் பல்வேறு வகையான தொழில்நுட்பங்களுடன் நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ‘சாயில்பில்ட்’ நிறுவனத்தில் அகழாய்வு இயந்திர (Excavator) ஓட்டுநராகப் பணிபுரியும் 45 வயது முத்துக்கண்ணு திருமாறன், தான் வேலைக்கு முதன்முதலில் வந்ததைவிட இப்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதாகக் கூறினார்.

அதிக வெப்பநிலை நிலவும்போது தமது நிறுவனத்தின் வாட்ஸ்அப் குழு மூலம் தங்களுக்கு ஓய்வு எடுக்கும்படி கூறும் தகவல்கள் வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதில் நிறுவனம் மிகவும் ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறினார்.

“சாதாரண தண்ணீரைவிடக் குளிர்ந்த நீரைக் குடிப்பது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது. இதனால், சோர்வின்றி சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வேலை செய்ய முடிகிறது,” என்று வேலைத்தளத்தில் பரவலாகக் குளிர்ந்த நீர் வைக்கப்பட்டிருப்பது குறித்து திரு முத்துக்கண்ணு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
வெப்பம்ஊழியர்கள்நடவடிக்கைமனிதவள அமைச்சுதினேஷ் வாசு தாஸ்