சிங்கப்பூர் வரும் மலேசிய டாக்சிகளுக்குக் கட்டணம் பன்மடங்கு உயர்வு

சிங்கப்பூர் வரும் மலேசிய டாக்சிகளுக்குக் கட்டணம் பன்மடங்கு உயர்வு

உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்: எல்டிஏ
படம்: ஏஷியா ஒன்

25 Jun 2026 - 6:32 pm

1 mins read

சிங்கப்பூருக்குள் நில எல்லைகளைக் கடந்து நுழையும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளுக்கான வாகன உரிமக் கட்டணம் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்படவுள்ளது.

அடுத்த ஆண்டுமுதல் மலேசிய டாக்சிகள் இங்கு ஒரு முறை நுழைவதற்கான உரிமக் கட்டணம் $15 என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்தது.

தற்போது மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் ‘ஆசியான் பொதுச் சேவை வாகன உரிமம்’ (PSVP) ஒன்றைப் பெற $2 கட்டணம் செலுத்துகின்றனர். சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையே வாடகை வாகனச் சேவை வழங்க அனுமதிக்கும் அந்த உரிமத்தை மலேசிய ஓட்டுநர்கள் பெறுவது கட்டாயமாகும்.

“கட்டண மாற்றம் மலேசியாவில் பதிவான டாக்சி வாகனங்களுக்கும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளுக்கும் இடையே உள்ள பயணக் கட்டணங்களின் வேறுபாட்டை சரிசெய்யும் நோக்கம் கொண்டது,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

காப்புறுதித் திட்டங்களுடன் இயங்கும் உரிமம்பெற்ற டாக்சி சேவைகளை மட்டும் எல்லை கடந்து மலேசியா செல்வதற்குப் பயன்படுத்தும்படி ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

ஆணையத்தின் அமலாக்க நடவடிக்கை

“பயணிகளின் பாதுகாப்பையும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய சட்டவிரோத பயணச் சேவை வழங்குவோர்மீது நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளும்,” என்று ஆணையம் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்
டாக்சிஎல்லைபயண சேவைகட்டணம்உரிமம்வாகன நுழைவு