சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிப்பதில் முத்தரப்புப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் இதுவரை இல்லாத அளவுக்குக் கூடியுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள், ஊழியர்கள், அரசாங்கம் ஆகியவை ஒரே திசையில் தங்களது முயற்சிகளைச் செலுத்தினால், சிறிய நாடான சிங்கப்பூர் வெகுதொலைவு செல்ல முடியும் என்று அவர் கூறினார்.
“பங்காளித்துவம், நம்பிக்கை ஆகியவற்றுக்கான இந்த ஒற்றுமையும் நம்பிக்கையும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சமாளிக்க நமக்குக் கைகொடுத்துள்ளது,” என்று டாக்டர் டான், வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வெளியான தமது தொழிலாளர் தினச் செய்தியில் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு துறையிலும் தொழில்துறைக்கு வலுசேர்ப்பவர்கள் முதல் அடிப்படைச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்கள் வரை, சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்லும் உழைக்கும் மக்கள் அனைவரும் தொழிலாளர் தினத்தில் கொண்டாடப்படுவதாக டாக்டர் டான் கூறியுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் சவால்களையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
“நம்மைச் சுற்றியுள்ள உலகம் மாறிவிட்டது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களையும், நிச்சயமற்ற தொழிற்சூழலையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். மத்திய கிழக்கு வட்டார மோதல்கள் இந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் எரிசக்தி விலைகள் உயர்ந்து, நிறுவனங்களும் பயனீட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் விளக்கினார்
மாறிவரும் தொழில்நுட்பமும் முதியோர் சமூகமும்
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிவேகத் தொழில்நுட்ப வளர்ச்சிகள், மக்கள் வேலை செய்யும் முறையை உருமாற்றி வருவதாக டாக்டர் டான் சுட்டினார்.
உள்நாட்டைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் இவ்வாண்டு அதிக முதியோரைக் கொண்ட சமூகமாக மாறவுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நமது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும், தொழில்சார்ந்த குறிக்கோள்கள் பன்முகத்தன்மை அடைவதாலும் ஊழியரணியின் கட்டமைப்பு உருமாறி வருகிறது,” என்று அவர் விளக்கினார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் ஆயுதமாகச் சிங்கப்பூரின் முத்தரப்புப் பங்காளித்துவம் முன்பைவிட மிக முக்கியமாக உள்ளது என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்மீதும் சிங்கப்பூரர்கள்மீதும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை கொண்டுள்ள கடப்பாட்டுக்காக டாக்டர் டான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்நிலையில், மனிதவள அமைச்சு, என்டியுசி, தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை இணைந்து செயற்கை நுண்ணறிவுச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வேலைகளுக்கான முத்தரப்பு மன்றத்தை (Tripartite Jobs Council) அமைத்துள்ளன.

