உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைத் தழுவ $45 மில்லியன் ஒதுக்கீடு

உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைத் தழுவ $45 மில்லியன் ஒதுக்கீடு

படம்: பொருளியல் வளர்ச்சிக் கழகம்

21 Oct 2026 - 6:06 pm

2 mins read

சிங்கப்பூரின் நவீன உற்பத்தித் துறையில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன்களை பயன்படுத்திக்கொள்வதில் உதவிபுரிய $45 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தியின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு அமையும் என்று எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

ஆசிய-பசிபிக் தொழில்துறை உருமாற்றம் என்ற தலைப்பில் புதன்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய திருவாட்டி கான், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் செயல்திறனை தங்களுக்கு ஏற்ற வகையில் கடைப்பிடிக்கவும் போட்டித்திறனை வலுப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை அணுக உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த முயற்சி உதவும் என்றார்.

அந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கேடலிடிக் AI சொல்யூஷன்ஸ்’ என்னும் திட்டம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சிறு, நடுத்தர நிறுவனங்கள் எளிதில் அணுக்கக்கூடியதாக மாற்றுவதோடு அந்தத் தொழில்நுட்பத்தைத் தழுவுவதில் அவை எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை மேற்கொள்ளவும் ஆதரவளிக்கும் என்று கான் கூறினார்.

“பெரிய உற்பத்தியாளர்களுக்கு மட்டுமல்லாமல், நமது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது,” என்றார் அவர்.

“இந்த தொடக்க முயற்சியின் மூலம், உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், திறனை அதிகரிக்கவும், போட்டியை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தவும் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளைப் பெற முடியும்,” என்று திருவாட்டி கான் மேலும் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், வர்த்தகச் சங்கங்கள், வர்த்தகச் சபைகள் மற்றும் தகுதிவாய்ந்த விற்பனையாளர்களுடன் இணைந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பலதரப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வழங்கும்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுநிறுவனம்நிதி