காப்புறுதித் திட்டங்களை வழங்கும் நிறுவனமான மனுலைஃப் சிங்கப்பூர், அதன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உன்னத நிலையத்தை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) தொடங்கியது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் தனது ஏஐ திறனாளர் தளத்தில் பணிபுரிவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக மனுலைஃப் கூறியது. தரவு அறிவியல், ஏஐ ஆளுமை, ஏஐ பொறியியல் துறைகளில் ஆள்சேர்ப்பதில் கவனம் செலுத்தப்படும்.
இந்த ஏஐ மையம் மூலம், ஏஐ கருவிகளின் மேம்பாட்டைத் தொடர மனுலைஃப் விரும்புகிறது. அதேவேளையில், நிதித் துறையில் திறன் குறைபாட்டைக் குறைக்கவும் அது முற்படுகிறது.
ஆள்சேர்ப்புக்கு அப்பாற்பாட்டு, தன் ஊழியர்கள் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளைச் செய்வதற்கேற்ப அவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் ஏஐ மையம் கவனம் செலுத்தும்.
வங்கியியல், நிதிக் கழகத்துடனும் சிங்கப்பூர் நாணய ஆணையத்துடனும் சேர்ந்து செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நிதி நிறுவனங்களில் மனுலைஃபும் ஒன்று.
மையத்தின் தொடக்க நிகழ்வில் பேசிய கலாசார, சமூக, இளையர்துறை; நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான், “சில்லறை காப்புறுதி முகவர்களின் பணியை மறுவடிவமைப்பு செய்யவும் இடர் பகுப்பாய்வு மற்றும் முடிவெடுப்பதை மேம்படுத்தக்கூடிய ஏஐ கருவிகளைப் பயன்படுத்த அவர்களுக்கு மறுதிறன் பயிற்சி அளிக்கவும் வங்கியியல், நிதிக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் வாழ்க்கைத்தொழில் மாற்றுத் திட்டத்தை மனுலைஃப் தொடங்கியுள்ளது,” என்பதைச் சுட்டினார்.

