தானா மேரா சாலையில் நிகழ்ந்த பல விபத்துகள், மிதிவண்டி ஓட்டிகளுடன் தொடர்புடையவை

தானா மேரா சாலையில் நிகழ்ந்த பல விபத்துகள், மிதிவண்டி ஓட்டிகளுடன் தொடர்புடையவை

2 mins read
564f26e6-8810-4eb5-8de7-b904f7f008e7
ஒழுங்கற்ற முறையில் மிதிவண்டி ஓட்டியதாலும் மிதிவண்டி ஓட்டிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும், வாகனத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தவறியதாலும் பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்ததாக உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டிலும் சராசரியாகத் தானா மேரா சாலையில் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்திய 20 விபத்துகள் நிகழ்ந்தன.

அவற்றில் ஒன்பது விபத்துகள் மிதிவண்டி ஓட்டிகளுடன் தொடர்புடையவை என்று உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒழுங்கற்ற முறையில் மிதிவண்டி ஓட்டியதாலும் மிதிவண்டி ஓட்டிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவாலும், வாகனத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தவறியதாலும் பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சாய் யின்சோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் திருவாட்டி சிம்மின் பதில் அமைந்தது.

தானா மேரா சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் எத்தனை விபத்துகள் மிதிவண்டி ஓட்டிகளுன் தொடர்புடையவை என்றும் அந்த விபத்துகளுக்குக் கனரக வாகனங்களும் சாலையில் கிடக்கும் சிதைவுகளும் காரணமா என்றும் திரு சாய் கேள்வி கேட்டிருந்தார்.

விபத்துகள் அதிகம் நிகழும் இடங்களில் போக்குவரத்துக் காவல்துறை அடிக்கடி அமலாக்கப் பணிகளில் ஈடுபடும் என்றும் தானா மேரா சாலையும் இதில் அடங்கும் என்றும் திருவாட்டி சிம் தெரிவித்தார்.

சாலைகளைப் பாதுகாப்பாகவும் கனிவுடனும் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை போக்குவரத்துக் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஏற்படுத்துகின்றன.

“உதாரணத்துக்கு, சிங்கப்பூர் மிதிவண்டி ஓட்டுதல் சம்மேளனத்துடனும் மக்கள் கழகத்துடனும் போக்குவரத்துக் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து செயல்படுகிறது. பாதுகாப்பான முறையில் மிதிவண்டி ஓட்டுவது, வாகன ஓட்டுநர்கள் மற்றும் மிதிவண்டி ஓட்டிகளுக்கான நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது,” என்றார் திருவாட்டி சிம்.

இதற்கிடையே, 2025ஆம் ஆண்டில் கடைசி ஆறு மாதங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ஏறத்தாழ 650 மிதிவண்டி ஓட்டிகளுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டன.

இந்த விதிமீறல்களில், போக்குவரத்து சமிஞ்கை விளக்குகள் விதிமுறையைப் பின்பற்றாததும் சாலைகளில் மிதிவண்டி ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து செல்லாததும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்