சிங்கப்பூருக்கும் தென்சீனாவுக்குமான பல விமானப் பயணங்கள் சூறாவளியால் ரத்து

சிங்கப்பூருக்கும் தென்சீனாவுக்குமான பல விமானப் பயணங்கள் சூறாவளியால் ரத்து

2 mins read
b10a6596-f2c9-40ff-89a5-35a3165bc908
சாங்கி விமான நிலையத்தில் 2022ல் காணப்பட்ட கெத்தே பசிபிக் விமானம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சீனாவின் குவாங்டொங் மாநிலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளையும் ‘நௌல்’ சூறாவளியும் புயலும் தாக்கியதைத் தொடர்ந்து, சிங்கப்பூரிலிருந்து சீனா செல்லும் 20க்கும் மேற்பட்ட வாரஇறுதிக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரங்களை சாங்கி விமான நிலைய இணையப் பக்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) வெளியிட்டது.

ஹாங்காங்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும் எஸ்ஐஏ, கெத்தே பசிபிக் நிறுவனங்களின் 13 விமானங்கள் அவற்றின் பயணங்களை ரத்து செய்துள்ளன.

அதற்கு முன்பாக, ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஜுலை 26 அன்று அதிகாலை 1.15 மணிமுதல் புறப்படவிருந்த விமானங்களும் அங்கு தரையிறங்கவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக கெத்தே பசிபிக் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்திருந்தது. அதே நாளில் சிங்கப்பூரிலிருந்து ஷென்சென் செல்லவிருந்த எஸ்கியூ 856 விமானத்தை எஸ்ஐஏ நிறுவனம் ரத்து செய்தது.

மேலும், ஷென்சென் ஏர்லைன்ஸ், சீனா சவுதர்ன் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சிங்கப்பூருக்கும் ஷென்சென் நகரத்திற்கும் இடையே இயக்கும் எட்டு விமானச் சேவைகளையும் ஜூலை 26 அன்று ரத்து செய்தன.

குறைந்த கட்டணச் சேவை வழங்கும் ஸ்கூட் நிறுவனமும் ஷன்டாவ் நகருக்கான சில விமானப் பயணங்களை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் அல்லது பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளுக்கு முழுத் தொகையும் திருப்பித் தரப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், விமானச் சேவை மாற்றங்கள் குறித்த தகவல்களை அறிய பயணிகள் எஸ்ஐஏ நிறுவனத்தின் இணையப்பக்கத்தைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் விமான நிலையம் வழக்கநிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்