சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனப் பிரதமர் லி சியாங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் அமெரிக்க-சீன வர்த்தகப் போர், தாய்லாந்து-கம்போடிய எல்லைப் பூசல் உட்பட பல்வேறு விவகாரங்கள் அலசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமைப்பின் விரிவாக்கம் முக்கிய இடத்தைப் பிடிக்கவிருக்கிறது. ஆசியான் அமைப்பில் 1.3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட திமோர் லெஸ்டே, 11வது உறுப்பு நாடாக அதிகாரபூர்வமாய் இணைகிறது.
கம்போடியாவும் தாய்லாந்தும் தங்கள் எல்லைப் பகுதியில் பதற்றத்தைக் குறைத்துக்கொள்ள வகைசெய்யும் உடன்பாட்டில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் சரக்கு வர்த்தக உடன்பாடும் ஆசியான்-சீனா தடையற்ற வர்த்தக உடன்பாடும் மேம்படுத்தப்படும்.
வட்டாரம் முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ள வேளையில் மாநாடு இடம்பெறுகிறது.
உலகின் சக்திவாய்ந்த நாடுகள் செல்வாக்கை நிலைநிறுத்த முயல்கின்றன. உலகப் பொருளியல் தொடர்ந்து கொந்தளிப்பைச் சந்திக்கிறது. இந்நிலையில், ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் ஆசியானின் ஆற்றலும் காலத்திற்கு ஏற்ற வகையில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதும் கூர்ந்து கவனிக்கப்படும்.
ஆசியான் தலைவர்கள் இரண்டு பெரிய மாநாடுகளில் பங்கேற்பர். ஒன்று, 28வது ஆசியான், சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை கலந்துகொள்ளும் உச்சநிலை மாநாடு. மற்றொன்று, 20வது கிழக்காசிய உச்சநிலை மாநாடு. அதில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை பங்கேற்கும்.

